அடுத்த 2 நாட்களில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – உங்க மாவட்டம் இருக்கா?
Rain Alert : தமிழகத்தில் நவம்பர் 5 மற்றும் நவம்பர் 6, 2025 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 4: தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16, 2025 முதல் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) தொடங்கிய நிலையில், மோன்தா (Montha) புயல் ஏற்பட்டு தமிழகத்தில் கனமழை பெய்தது. இந்த நிலையில் அதன் பிறகு மழை குறைந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 5, 6, 2025 ஆகிய நாட்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நாளை கனமழை பெய்யும் மாவட்டங்கள்
தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் படி நவம்பர் 6, 2025 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. முழு ரிப்போர்ட் இதோ..
நவம்பர் 6 அன்று கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம் நவம்பர் 6, 2025 அன்று வியாழக்கிழமை, 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதாகவும், அதனால் தமிழகத்தில் பரவலான மழை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு பருவமழை தற்போது வலுப்பெற்று உள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை
சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில நேரங்களில் திடீர் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து மேற்சொன்ன மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அக்டோபர் மாதம் 36% அதிக மழை.. இனி வறண்ட வானிலையே இருக்கும் – பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழையின் தீவிரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது தெரியவரும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையில்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியிருக்கிறது.