தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Heavy rain: தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்றும் அந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மாதிரிப் படம்

Updated On: 

24 Nov 2025 06:34 AM

 IST

சென்னை, நவம்பர் 24: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 8.30 மணி அளவில் இருந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ‘ஓயாத ரீல்ஸ் மோகம்’.. எச்சரிக்கையை மீறி திருச்செந்தூர் கோவிலில் நடனமாடிய இளைஞர்கள்!!

48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு:

அதோடு, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சென்யார் புயலாக உருவாகக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.25) உருவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் கனமழை:

அதேசமயம், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:

குறிப்பாக தென் மாவட்டங்களில் விடாது பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (நவ.24) பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையைப் பொறுத்து மேற்கொண்டு முடிவெடுக்க முடியும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து தேர்வுகள் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?
திரிஷ்யம் 3 படம் இப்படி தான் இருக்கும்.. மனம் திறந்த ஜித்து ஜோசப்..
15,000 கி.மீ பயணித்த மாரிச் கழுகு
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி