ஒரு மாதம் டைம்.. செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு காலக்கெடு.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Chennai Corporation : சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் ஆகியவற்றிற்கு மைக்ரோசிப் பொருத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்டவைக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் ரூ.50 செலுத்தி உரிமம் மற்றும் மைக்ரோசிப் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அக்டோபர் 04 : வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஒரு மாதத்திற்குள் அவற்றுக்கான உரிமை பெற்று, சிப் பொருத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார். செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் ஆகியவற்றிற்கு மைக்ரோசிப் பொருத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் மூலம் ரூ.50 செலுத்தி உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் குழந்தைகள், முதியவர்கள் என பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சிலர் ரேபிஸ் நோயால் உயிரிழந்து வருகின்றனர். நாய் கடி சம்பவங்களை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தெரு நாய்களை கட்டுப்படுத்த ரேபிஸ் தடுப்பூசி, கருத்தடை போன்றவற்றை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் ஆகியவற்றிற்கு மைக்ரோசிப் பொருத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை மேயர் பிரியா 2025 அக்டோபர் 3ஆம் தேதியான நேற்று தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது, சிப் பொருத்துவது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
Also Read : குஷியில் தென்மாவட்ட பயணிகள்.. நெல்லை வந்தே பாரத் ரயிலில் மேஜர் மாற்றம்.. வெளியான அறிவிப்பு
செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு காலக்கெடு
வணக்கம் #Chennaiites,
இன்று மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் ஆகியவற்றிற்கு மைக்ரோசிப் பொருத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான மேம்படுத்தப்பட்ட இணையதளத்தினை ரிப்பன் கட்டட… pic.twitter.com/sAdOLakR6j
— Greater Chennai Corporation (@chennaicorp) October 3, 2025
இந்த வலைத்தளத்தை மாநகராட்சி அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் பொதுவான புகார்களுக்கும் அணுகலாம். உரிமம் பெற்ற அனைத்து செல்லப்பிராணிகளின் விவரங்களும், உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள், தடுப்பூசி போன்ற தகவல்கள் இணையத்தில் இருக்கும். அரசு மற்றும் தனியார் கால்நடை மருத்துவமனைகள் இரண்டும் மருத்துவர்களின் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற உரிமையாளர்கள் தங்கள் புகைப்படம், முகவரிச் சான்று மற்றும் செல்லப்பிராணியின் இனம், பாலினம், புகைப்படம் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி (ABV) சான்றிதழை இணையதளம் மூலம் பதிவேற்ற வேண்டும். உரிமம் பெற ரூ.50 செலுத்த வேண்டும். ABV சான்றிதழ் காலாவதியாகும் வரை மட்டுமே உரிமம் செல்லுபடியாகும். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 2024 முதல் செப்டம்பர் 2025 வரை, 12,393 உரிமங்கள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read : இன்று இந்த 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேயர் பிரியா, “செல்லப்பிராணி வைத்திருப்பவர்கள் இணையதளம் மூலம் ரூ.50 செலுத்தி சிப் பொருத்த வேண்டும். வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்போர் ஒரு மாதத்திற்குள் அவற்றுக்கான உரிமம் பெற்று சிப் பொருத்த வேண்டும். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இவற்றில் 67,297 தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள தெருநாய்களுக்கு விரைவில் ரேபிஸ் தடுக்பூசி செலுத்தி கருத்தடை செய்யப்படும்” என்று கூறினார்.