கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – அமித்ஷாவை சந்திக்கும் அண்ணாமலை – காரணம் இதுவா?

Karur Stampede : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இது நாடு முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் - அமித்ஷாவை சந்திக்கும் அண்ணாமலை - காரணம் இதுவா?

அமித் ஷா - அண்ணாமலை

Updated On: 

04 Oct 2025 14:51 PM

 IST

சென்னை, அக்டோபர் 4 : கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதனையடுத்து அரசியல் அரங்கில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் எம் ஹேமாமாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட விசாரணைக் குழு சமீபத்தில் கரூரில் தவெக பரப்புரை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தமிழக அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே இதற்கு காரணம் என ஹேமாமாலினி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷாவை சந்திக்கும் அண்ணாமலை

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக பாஜகவின் செயல்பாடுகள், கரூர் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத தேர்தல் ஆகியவை குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் அண்ணாமலைக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : அரசியல் ஆதாயம் தேட கரூர் பயணம்.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி அமித் ஷாவை சந்தித்து பேசியது பேசு பொருளானது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகியது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி மறுத்ததோடு, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பது தொடர்பாக சந்தித்து பேசியதாக விளக்கமளித்திருந்தார்.

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – இனி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பரபரப்பான நிலையை எட்டியிருக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இது தொடர்பான பொது நல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி செந்தில் குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி போராடிக்கொண்டிருக்கும்போது விஜய்யும் அவரது கட்சி நிர்வாகிகளும் அங்கிருந்து கிளம்பியதுடன் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் தங்களது விமர்னங்களை முன் வைத்தார். இதற்கிடையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இருவரையும் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.