தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்.. அடுத்த இடம் எங்கே தெரியுமா?
TVK Vijay Campaign: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 16, 2025 அன்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக, தமிழக வெற்றி கழக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்காக தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
டிசம்பர் 7, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 16, 2025 அன்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக வெற்றி கழக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்காக தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அனுமதி கோரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், சாலை வளம் என்பது தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள், கள நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.
மேலும் படிக்க: “தேர்தல் நெருங்கும் நேரத்தில் லேப்டாப் வழங்குவதா?” நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!!
கரூர் கூட்ட நெரிசல்:
அதில் குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தைப் பொருத்தவரையில், 2026 தேர்தல் என்பது இருவருக்கிடையேயே போட்டி என விஜய் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த சூழலில் ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு மாத காலம் தமிழக வெற்றி கழகத்தின் நகர்வுகள் அனைத்தும் முடங்கியது.
அதே சமயத்தில் விஜய் அரசியலை விட்டு விலகுவார் என்ற யூகங்களும் வெளியானது. ஆனால் ஒரு மாத காலம் கடந்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மேலும் படிக்க: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது.. டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!!
தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம்:
ஒருபுறம் தேர்தல் ஆணையத்தை அணுகி சின்னம் கோரிக்கை வைக்கின்றனர்; மறுபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பேசப்படுகிறது; மற்றொரு புறம் நிர்வாகிகளை நியமிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரூர் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து விஜயின் சுற்றுப்பயணம் பல நாட்களாக நடைபெறாத சூழலில், கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் உள்ள அரங்கில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்களை சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து வரும் 9ஆம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட உள்ளார். விஜய் முதலில் சாலை ஊர்வலம் மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மக்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது. அனுமதி சீட்டும் வழங்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்:
மெல்ல மெல்ல விஜய் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வரும் நிலையில், வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்கான சுற்றுப்பயணத்திற்காக மாவட்ட கண்காணிப்பாளரிடம் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தைத் தொடர்ந்து, மெல்ல மெல்ல அடுத்தடுத்த மாவட்டங்களிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.