மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி…ஒரு மாதத்துக்கு பிறகு தடை நீக்கம்…சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
Manimutharu Falls Allows Bathing : நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வெள்ளப் பெருக்கால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
திருநெல்வேலி மாவட்டம், அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலையின் அடி வாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இந்த அருவியில் அனைத்து மாதங்களிலும் தண்ணீர் விழுவது வழக்கமாகும். அதன்படி, இந்த அருவியில் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த அருவியானது அம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு மிக சிறந்த சுற்றுலா இடமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்ததால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஊத்து எஸ்டேட், மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தது. இதனால், மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நவம்பர் 18-ஆம் தேதி முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்திருந்தது.
மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கான சூழல்
இந்த நிலையில், மணிமுத்தாறு அருவியை சுற்றி உள்ள புறநகர் பகுதியில் மழை நின்று விட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறையாமல் இருந்து வருகின்றது. தற்போது, மலைப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ள நிலையில், மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது.
மேலும் படிக்க: உலகின் உயரமான ரயில்வே பாலம்… முதல் செங்குத்து பாலம் வரை – உள்கட்டமைப்பில் இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள்
ஒரு மாதத்துக்கு மேலான தடை நீக்கம்
இதனால், கடந்த ஒரு மாதமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. சுமார் 37 நாட்களுக்குப் பிறகு மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தவிர்க்க முடியாத நீர் வீழ்ச்சி பகுதி மற்றும் சிறந்த சுற்றுலாத் தளங்களில் தவிர்க்க முடியாதது மணிமுத்தாறு அருவியாகும்.
தவிர்க்க முடியாத சுற்றுலா தளம்
இந்த அருவியில் வார இறுதி நாள்கள், அரசு விடுமுறை நாள்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள். வடகிழக்கு பருவ மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்திருந்தது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
மணிமுத்தாறு அருவியில் அதிகளவு குவியும் பொதுமக்கள்
தற்போது, அந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகியவை தொடர்ந்து வருவதால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். இதனால், சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. நீலகிரி, கொடையில் தொடரும் உறைபனி.. நிலவரம் என்ன?