தமிழ்நாட்டில் அக்டோபர் 3ம் தேதி விடுமுறையா? – உண்மை இதுதான்!
அக்டோபர் 3ஆம் தேதி அரசு விடுமுறை குறித்த தகவல் உண்மையல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. சரஸ்வதி, ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறைகளை ஒட்டி 3ஆம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி தவறானது என கூறப்பட்டுள்ளது.

Leave
தமிழ்நாடு, அக்டோபர் 1: அக்டோபர் 3ம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் துறை விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் சரஸ்வதி, ஆயுதபூஜை இன்று (அக்டோபர் 1) கொண்டாடப்படுகிறது. அதேபோல் நாளை (அக்டோபர் 2) விஜய தசமி, காந்தி ஜெயந்தி ஆகிய விடுமுறை தினங்கள் வருகிறது. இந்த இரண்டு தினங்களும் அரசு விடுமுறை என்பதால் வெளியூரில் வசிக்கும், பணியாற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டுள்ளனர். இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அமலில் உள்ளது.
இதனிடையே ஆயுத பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய விடுமுறைகள் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வருகிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாகும். அதன் பின்னர் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை தினங்களாகும். காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் 2025, அக்டோபர் 6ம் தேதி திங்கட்கிழமை தான் திறக்கிறது.
இதையும் படிங்க: கரூர் தவெக பரப்புரையில் என்ன நடந்தது..? தமிழ்நாடு அரசு விளக்கம்!
இதனையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் பண்டிகைகளையும், விடுமுறை தினத்தையும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என பல தரப்பட்ட மக்கள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.
Fact Check அளித்துள்ள விளக்கம்
அக் 3ம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல ! @CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/gpNBH9RyrZ
— TN Fact Check (@tn_factcheck) September 30, 2025
இந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி பொதுவிடுமுறை விடப்பட்டதாக நேற்று சமூக வலைத்தளங்களில் ஊடக நிறுவன பெயர்களில் செய்திகள் பரவ தொடங்கியது. ஆனால் முறைப்படி தமிழ்நாடு அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் மக்கள் குழப்பமடைந்தனர். இதனிடையே மாநில அரசின் உண்மை சரிபார்ப்பகம் துறை இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 3ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது என்ற தகவல் உண்மையல்ல என்றும், அன்றைய தினம் பணி நாள் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பண்டிகை காலங்களில் மக்கள் வெளியூருக்கும் பயணம் செய்யும் பொருட்டு அல்லது மறுபடியும் பணியிடங்களுக்கு செல்லும் பொருட்டு பொது விடுமுறை அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை மக்களும் எதிர்பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அமைச்சருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என சொன்ன அன்புமணி.. காட்டமாக பதில் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்.. நடந்தது என்ன?
இந்த நிலையில் 2025, அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி வருகிறது. அதற்கு மறுநாள் செவ்வாய்கிழமை பொது விடுமுறை அறிவித்து வெளியூர் சென்ற மக்கள் ஊர் திரும்பும் வகையில் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் தான் இந்த அக்டோபர் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.