பங்குச்சந்தை முதலீடு.. ஈரோட்டில் எலக்ட்ரிகல் கடை ஓனரிடம் ரூ.2.75 கோடி மோசடி

Online investment scam: ஈரோடு மின்சாதன கடை உரிமையாளர் நரேஷ்குமார் பங்குச்சந்தையில் அதிக லாபம் தருவதாகக் கூறி போலியான முதலீட்டு செயலியில் ரூ.2.75 கோடி இழந்தார். அறிமுகம் இல்லாத நபரால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர் முதலீடு செய்த செயலி முடக்கப்பட்டதால் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை முதலீடு.. ஈரோட்டில் எலக்ட்ரிகல் கடை ஓனரிடம் ரூ.2.75 கோடி மோசடி

பங்குச்சந்தை முதலீடு மோசடி

Updated On: 

17 Oct 2025 06:42 AM

 IST

ஈரோடு, அக்டோபர் 17: பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசைகாட்டி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த எலக்ட்ரிகல் கடை உரிமையாளரிடம் ரூ.2.75 கோடி மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் நரேஷ்குமார் என்பவர் எலக்ட்ரிகல் கடை ஒன்றை நடத்தி வருகிறார், இவருக்கு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பங்குச்சந்தையில் அவ்வப்போது சிறிய தொகையை முதலீடு செய்தும் வந்திருக்கிறார்.

ஆசை காட்டிய அறிமுக இல்லாத நபர்

இந்த நிலையில் 2025 ஜூன் மாதம் நரேஷ் குமாரை அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நீங்கள் தொடர்ச்சியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருவதை நாங்கள் கவனிக்கிறோம். குறிப்பிட்ட ஒரு செயலியில்  முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி உள்ளார்.

Also Read: ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த மோசடிக்காரர்.. முதலீட்டு மோசடியில் ரூ.15 லட்சத்தை இழந்த நபர்!

ஏற்கனவே விரைவில் அதிக பணம் பெற வேண்டும் என குறிக்கோளுடன் இருந்தால் நரேஷ் குமார் அந்த அறிமுகம் இல்லாத நபர் சொன்ன வார்த்தையை நம்பி கடந்த மூன்று மாதங்களாக பல தவணைகளில் சுமார் ரூபாய் 2.75 கோடி முதலீடு செய்துள்ளார். அந்த நபர் சொன்னது போல அந்த செயலியில் லாபத் தொகையும் காட்டியுள்ளது.  இந்த நிலையில் தனது பங்குச்சந்தை செயலி வாலட்டில் இருந்த ரூ.9 கோடியை சமீபத்தில் நரேஷ் குமார் விடுவிக்க முயற்சி செய்துள்ளார்.

முடக்கப்பட்ட செயலி

ஆனால் அது முடியாமல் போனது. இதனை தொடர்ந்து தனக்கு இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்த நபருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய அவர் பல்வேறு காரணங்களை கூறி ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார். பின்னர் பலமுறை தொடர்பு கொண்டு அவரிடம் நரேஷ் குமாரால் பேச முடியவில்லை.

அதேசமயம் நரேஷ் குமார் முதலீடு செய்த செயலியும் முடக்கப்பட்டது.  இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு  அதிகமாக இருப்பதால் இந்த புகார் சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: வாட்ஸ்அப் மூலம் வந்த ஆபத்து.. ஆன்லைன் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த பேராசியர்!

பங்குச்சந்தை உள்ளிட்ட எந்தவித விஷயங்களிலும் முதலீடு செய்ய விரும்பினாலும் தகுந்த ஆலோசகர்களை அணுகி அதிலிருக்கும் சாதகம், பாதகம் எல்லாம் அறிந்த பிறகு செய்ய வேண்டும். அதேசமயம் அறிமுகம் இல்லாத நபர்களின் பேச்சில் மயங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.