பாமகவின் தலைவர் அன்புமணி தான் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Anbumani Ramadoss : கடந்த சில மாதங்களாக பாமக தலைவர் யார் என்பதில் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி தான் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புணியும் (Anbumani) ஒருவரையொருவர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். குறிப்பாக பாமக தலைவர் ராமதாஸ் தன் வீட்டில் அன்புமணி ஒட்டு கேட்கும் கருவிகளை வைத்ததாக பகீர் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும் பாமகவின் தலைவராக தனது மகள் காந்திமதியை, ராமதாஸ் நியமித்தார். முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். அப்போது தொடங்கிய பனிப்போர் தற்போது தீவிர மடைந்துள்ளது.
பாமகவின் தலைவர் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பாமகவில் தலைவர் பதவிக்கான குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது. அதன் படி, வருகிற 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் எனவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கான ஆவணங்கள் உள்ளது. கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாஸிற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் அக்கட்சியின் வட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிக்க : “பாஜகவின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன்”.. அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!
ஜிகே மணி கண்டனம்
இந்த நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவி காலமான 3 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டு பொதுக்குழு நடந்ததாகவும், 2026 ஆம் ஆண்டு வரை அவர் பதவி காலம் நீடிக்கும் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாங்கள் டெல்லியில் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பை நடத்தியிருந்து. இந்த நிலையில் இது தொடர்பாக நவம்பர் 28, 2025 அன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் நடைபயணத்தை தொடங்கினேன். இவர்கள் தமிழகத்தை ஆள தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள் என்றார்.
இதையும் படிக்க : இருட்டைக் கண்டு அஞ்ச வேண்டாம்; “சூரிய உதயம் வரும்; உதயநிதியும் வருவார்”.. கமல்ஹாசன் பேச்சு!!
மேலும் பேசிய அவர், மொத்த நெல் அறுவடையில் மூன்றில் ஒரு பங்கு தான் அரசு கொள்முதல் செய்கிறது. மற்றவற்றை தனியார் தான் கொள்முதல் செய்கின்றனர். அதற்கு முறையான கொள்முதல் நிலையங்களை அரசு அமைக்கவில்லை. முதல்வரே நீங்களும் டெல்டாவிலிருந்துதானே வருகிறீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.



