கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..
School Holiday: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இருக்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 18, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, நவம்பர் 18, 2025: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இருக்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 18, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அதேபோல் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு–வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் வரும் நவம்பர் 22, 2025 அன்று தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும்,
அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரவிருக்கும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் நல்ல கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகக்கூடிய அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக, வரக்கூடிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் விடிய விடிய பெய்த மழை.. இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
புதுச்சேரியில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை:
அந்த வகையில், 18 நவம்பர் 2025 தேதியான இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய நாட்களிலும் இந்த மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், திருவாரூர், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை:
கடந்த சில நாட்களாக அநேக மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 17, 2025 தேதியான நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேலும் படிக்க: ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாது மிதமான மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 18, 2025) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழை காரணமாக திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.