திமுக கூட்டணியில் திராவிட வெற்றி கழகம் இணைய தயார்…மல்லை சத்யா!
DVK Ready To Join DMK Alliance: திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் திராவிட வெற்றி கழகம் இணைய தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மல்லை சத்யா தெரிவித்தார். மேலும், தனது கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யதாக குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் இணைய தயார்
இது தொடர்பாக திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து உள்ளோம். நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தில் திராவிட வெற்றிக் கழகம் பயணம் செய்யப்போகிறது. தமிழகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம். தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் திராவிட வெற்றி கழகம் போட்டியிட தயாராக உள்ளது. திமுகவில் இருந்து பிரிந்த மதிமுக மீண்டும் திமுக உடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதே போல, எங்களது தாய் கழகமான திமுகவின் வெற்றிக்கு தொண்டாற்றுவதற்காக அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளோம்.
தவெகவுக்கும், திவெகவுக்கு வித்தியாசம் உள்ளது
தமிழக வெற்றி கழகத்துக்கும், திராவிட வெற்றி கழகத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. tvk என்பது தமிழக வெற்றி கழகம். dvk என்பது திராவிட வெற்றி கழகம் ஆகும். எனவே, இந்திய தேர்தல் ஆணையம் இது போன்ற பெயரில் பதிவு செய்துள்ளதா என்று மட்டுமே பார்ப்பார்கள். திராவிட வெற்றி கழகத்தின் பெயரை இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக கூடுதல் ஆவணம் கேட்கப்பட்டால் நாங்கள் அதனை சமர்ப்பிக்க தயாராக உள்ளோம்.
மேலும் படிக்க: “திமுக ஒரு தீய சக்தி.. TVK ஒரு தூய சக்தி” ஈரோட்டில் விஜய் ஆக்ரோஷம்!!
முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவில்லை
நான் கூட்டணி தொடர்பாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் திமுகவின் முன்னணி தலைவர்களை நான் சந்திக்கவில்லை. ஏனென்றால், திராவிட முன்னேற்ற கழகம் என்னை பின் இருந்து இயக்குகிறது என்று வைகோ குற்றச்சாட்டை வைப்பதற்கு ஏதுவாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக நான் யாரையும் சந்திக்காமல் உள்ளேன். தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நான் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து எங்களது விருப்பத்தையும், கோரிக்கையையும் தெரிவிப்போம். அதனை பரிசீலித்து எங்களுக்கு ஒரு வாய்ப்பை தருவார் என்று நம்பிக்கை உள்ளது.
திராவிட வெற்றிக் கழகத்தின் கொடியின் சிறப்பு
திராவிட வெற்றி கழகத்தின் கொடியில் 3 பாகம் சிவப்பும், 1 பாகம் கருப்பு உள்ளது. இந்த கொடியில் பொறிக்கப்பட்டுள்ள 7 நட்சத்திரங்கள் கருத்தியல் தலைவர்களை குறிக்கிறது. இதில் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சர் பிட்டி தியாகராயர், டி எம் நாயர், நடேசனார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் இந்திய அரசியலுக்கு அம்பேத்கர், உலக அரசியலுக்கு அறிவுலக மேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர்களை குறிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய தொண்டர்கள் – திருப்பூர் அருகே பரபரப்பு