“தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்” மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ்!!

Admk district secretaries meet: சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக SIR சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை நிர்வாகிகள் மிக கவனமாக கையாள வேண்டுமென்றும், அதிகாரிகளுடன் வீடு வீடாக நேரில் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ்!!

கோப்புப்படம்

Updated On: 

05 Nov 2025 14:53 PM

 IST

சென்னை, நவம்பர் 05: தேர்தல் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக (ADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், அதிமுக உட்கட்சி பூசல், மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதோடு, பூத் பணிகளை மேற்கொள்பது குறித்த ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார். முன்னதாக, நவ.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் IT பிரிவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடந்தினார்.

இதையும் படிக்க : கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..

அதில், சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபடுவது பற்றியும், வாக்குச்சாவடி முகவர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின்போது மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் பற்றியும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மாவட்ட செயலாளர்களின் செல்வாக்கு, தேர்தலுக்கு அவர்களின் ஒத்துழைப்பு நிலை என விரிவாக பல்வேறு விவகாரங்கள், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணியை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், வேறு எந்த கட்சிகளுடன் தற்போது வரை கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரியவில்லை. எனினும், தவெகவை மட்டும் வலிந்து கூட்டணிக்கு அழைத்து வந்தது. ஆனால், அக்கட்சி அதற்கு செவி சாய்க்கவில்லை எனத் தெரிகிறது.

பூத் கமிட்டி பணியில் கவனம்:

இதன் தொடர்ச்சியாக இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து 82 மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், மாவட்ட செயலாளர்களின் தேர்தல் பணிகள் , கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்திடவும் சட்டமன்ற தொகுதி வாரியான கள நிலவரம் தொடர்பாகவும் கேட்டறியப்பட்டுள்ளது. அதோடு, உட்கட்சி பூசல், செங்கோட்டையன் நீக்கம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..

அதோடு, அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் கவலை கொள்ள வேண்டாம் என அறிவுறுத்திய எடப்பாடி பழனிசாமி, பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தால் மட்டுமே போதும் என்றும், அதில் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.