விமானத்தில் நடுவானில் மயங்கிய பயணி.. உயிரை காக்க போராடிய மருத்துவர்கள்.. திடுக் நிமிடங்கள்!!
கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு கொண்ட பயணி ஒருவர் விமானத்தில் நடுவானில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரது உயிரைக் காக்க விமானத்தில் பயணித்த 3 மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை காப்பாற்ற முயன்றுள்ளனர். எனினும், அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரிலிருந்து மிலன் நோக்கி சென்ற அந்த விமானத்தின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பயணி ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து சரிந்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை விமான கேபின் குழுவினர் மீட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர். தொடர்ந்து, விமானத்தில் மருத்துவர்கள் யாரேனும் இருந்தால் உதவிக்கு முன்வரவும் என கேபின் குழு உதவிக்கோரி விமான ஸ்பீக்கரில் அறிவிப்பை வெளியிட்டது. இதனை கேட்டு விமானத்தில் இருந்த 3 மருத்துவர்கள் உடனடியாக உதவி செய்ய முன்வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரின் Mount Elizabeth Novena மருத்துவமனையில் பணியாற்றும் இரைப்பை குடல் நிபுணர் டெஸ்மண்ட் வாய் (Desmond Wai) ஆவார்.
இதையும் படிங்க : பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட கடுமையான சூறாவளி.. 140 பேர் பலி!
நடுவானில் CPR சிகிச்சை:
தொடர்ந்து, 3 மருத்துவர்களும் சேர்ந்து மயங்கிய நிலையில் இருந்த பயணிக்கு சிபிஆர் (cardiopulmonary resuscitation) சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களுடன் விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினரும் அந்த பயணியின் உயிரை காக்க போராடினர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தீவிரமாக முயற்சித்த போதிலும், அந்த நபரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து, மருத்துவர்கள் தங்கள் முயற்சியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்தனர்.
அந்த பயணிக்கு ஏற்கெனவே கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பதும், அதற்கு சிகிச்சை எடுத்து வருவதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் எதிர்பாரத விதமாக திடீரென விமானத்தில் மயங்கிய நிலையில் உயிர் பிரிந்துள்ளது.
மருத்துவர்களின் 30 நிமிட போராட்டம்:
இதுகுறித்து மருத்துவர் டெஸ்மண்ட் வாய் கூறும்போது, நீண்ட போராட்டத்திற்கு பின்பும் அந்த நபரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. நாங்கள் தோல்வியடைந்தோம் என்பதை கூற வருந்துகிறேன். ஆனால், அதுதான் வாழ்க்கை.. ஒரு மருத்துவராக ஒரு உயிரை காப்பாற்ற வேண்டியது எனது கடமை என்றார். தொடர்ந்து, உயிரிழந்த நபரின் மனைவி மருத்துவருக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க : நேபாள பனிச்சரிவில் பலியான 9 மலையேற்ற வீரர்கள்.. சடலங்கள் மீட்பு!
மருத்துவர் டெஸ்மண்ட் வாய் தற்போது தனது விடுமுறையில் இருந்துள்ளார். அதோடு, குடும்பத்துடன் மிலனுக்கு சுற்றுலா சென்ற சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், தான் விடுமுறையில் இருப்பதை பொருட்படுத்தாது அவர் பயணியை காக்க முன்வந்துள்ளார். அந்த மருத்துருக்கு விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில், பயணியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அதோடு, உதவிய மருத்துவர்களுக்கும், விமான மருத்துவ குழுவினர்களுக்கும் நன்றி கூறியுள்ளது.



