திமுகவின் தேர்தல் அறிக்கை…. மக்களும் நேரடியாக கருத்து தெரிவிக்கலாம்… திமுகவின் புதிய செயலி
DMK App for Election Manifesto: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கைகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்கும் விதமாக புதிய செயலியை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

மு.க.ஸ்டாலின்
சென்னை, டிசம்பர் 30: வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக (DMK) தனது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக பொதுமக்களின் கருத்துகளை நேரடியாக பெறும் வகையில் ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) டிசம்பர் 31, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். மக்கள் தங்களது கோரிக்கைகள், தேவைகள் மற்றும் கருத்துகளை இந்த செயலியின் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கை தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் தேர்தல் அறிக்கையை உருவாக்கும் நோக்கில் ஏற்கனவே 12 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!
இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த நவம்பர் 22, 2025 அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் கோரிக்கைகள் மற்றும் வாழ்க்கைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று கனிமொழி தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த குழு தமிழகமெங்கும் பயணம் செய்து, விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களின் கருத்துகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க புதிய செயலி
இந்த குழுவில் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கோவிந்தராஜ் செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். மக்கள் சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகளின் மூலம் பெறப்படும் கருத்துகள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர்கள் மாவட்ட வாரியாக சென்று பொதுமக்களின் கருத்துகளை கேட்கவுள்ளனர்.
இதையும் படிக்க : ஆங்கில புத்தாண்டுக்கு பொதுமக்கள் ஈஸியா ஊருக்கு செல்லலாம்…TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் நேரடியாக தங்களின் கருத்துகளை தெரிவிக்க வசதியாக, திமுக புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மக்களை நேரடியா பங்கேற்க செய்வதன் முயற்சியாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 31, 2025 அன்று அறிமுகப்படுத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.