கரூர் கூட்ட நெரிசல்.. விஜய் செய்த தவறுகள் இதுதான்.. லிஸ்ட் போட்டு விமர்சித்த பிரேமலதா!
DMDK Leader Premalatha Vijayakanth : கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கரூர் சம்பவம் தொடர்பாக தவெக விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், விஜய் செய்த தவறுகளை பட்டியலிட்டு ஆவேசமாக அவர் பேசியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்
சென்னை, அக்டோர் 06 : குறித்த நேரத்தில் விஜய் பரப்புரைக்கு செல்லவில்லை என்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு மட்டும் குறித்த நேரத்தில் சென்றுவிடுவார் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயை அவர் விமர்சித்தது பேசும் பொருளாக மாறியது. 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடந்த இந்த பரப்புரையில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.
கரூர் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும், இதுவரை அதுபற்றி தவெக தலைவர் விஜயும், பொதுச் செயலாளர், இணை செயலாளர், மாவட்ட செயலாளர் என யாரும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. மேலும், அதுபற்றி பொதுவெளியில் பேசவும் இல்லை. இதற்கிடையில், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மீது அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயை சரமாரியாக விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, கரூர் விவகாரம் தொடர்பாக ஆவேசமாக பேசினார்.
Also Read : அது உண்மையில்ல…. வதந்தி – விஜய் குறித்து வெளியான தகவல் – உள்துறை அமைச்சகம் விளக்கம்
”ஒரு கட்சி என்றால் தைரியம் வேண்டும்”
அவர் பேசுகையில், ”கரூர் பரப்புரையில் அவரைப் பார்க்கக் மக்கள் காத்திருந்தனர். குறித்த நேரத்திற்கு விஜய் செல்லவில்லை. மக்கள் காத்திருக்கின்றனர் என்ற பொறுப்பு இருக்க வேண்டாமா? தன்னுடைய கடமை உணர்வைத் தவறவிட்டார். ஆனால், படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டும் குறித்த நேரத்தில் விஜய் சென்றுவிடுவார். பேரணியில் மின்சாரம் தடைப்பட்டதால் கூட்டம் அதிகரித்ததாகக் கூறுவது பொய்.
பேரணிக்கு வந்த மக்களுக்கு ஏற்பாட்டாளர்கள் தண்ணீர், உணவு மற்றும் பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும். அந்த துயர நாளில் தவெக தலைவர் விஜய் விமானத்தை பிடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர் உறுதியளித்த இழப்பீட்டை அவர் தனிப்பட்ட முறையில் வழங்க வேண்டும்.
Also Read : நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவதூறு – பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது
இது அவர் செய்த அடுத்த தவறு. ஏதோ கூண்டுக்குள் புகுந்து கொள்வதை போல பேருந்துக்குள்ளேயே இருக்கிறார். உங்கள் அண்ணன் விஜயகாந்த் செய்த விஷயங்களை கற்றுக் கொண்டு செய்யுங்கள். தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். தலைக்கு கத்தியா வரப்போகிறது. தூக்கிலா போடப் போகிறார்கள். ஒரு கட்சி என்றால் தைரியம் வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்திற்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தலைவர் நிற்க வேண்டும்” என்று கூறினார்.