அமைச்சர் நேரு துறையில் ரூ.1000 கோடி ஊழல்?தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Minister K N Nehru: அமைச்சர் கே . என். நேருவின் துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் .

ஊழல் ஆதாரங்களை சமர்ப்பிக்க டிஜிபிக்கு உத்தரவு
தமிழகத்தில் அமைச்சர் கே. என். நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உள்ள 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ரூ.888 கோடி லஞ்சம் வாங்கியதாகவும், இதே துறையில் டெண்டர் வழங்கியதில் ரூ.1020 கோடி ஊழல் நடைபெற்றதாகவும், பணியிட மாற்றத்துக்கு ரூ.365 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பி இருந்தது. அந்த கடிதத்தில் ஊழல் வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தது. இந்த கடிதத்தை தமிழக அரசின் கவனத்திற்கு டிஜிபி அனுப்பி வைத்திருந்தார். இந்த நிலையில், அதிமுகவின் எம்.பி. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், அமைச்சர் கே. என். நேருவின் துறையில் நிகழ்ந்த ஊழல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு தொடுப்பு
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் மீது முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார். அப்போது, எதற்காக தற்போது வரை வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் படிக்க: ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளில் சில தளர்வுகள்…என்ன அது…வீரர்கள் மகிழ்ச்சி!
எழுத்துப்பூர்வ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
உடனே, கூறுக்கிட்ட நீதிபதிகள் அரசியல் சார்ந்த காரணம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாது, வழக்கில் உள்ள தன்மையை மட்டுமே நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என நீதிபதி கூறினார். மேலும், தற்போது வரை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உடனே உத்தரவிட முடியும். ஆனால், தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்பதால் வரும் ஜனவரி 28-ஆம் தேதி ( புதன்கிழமை) க்குள் எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.
டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மேலும், அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதம் உள்ளிட்ட ஆதாரங்களை வரும் ஜனவரி 28-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை அதே தேதிக்கு ஒத்தி வைத்தனர். அமைச்சர் நேருவின் துறையில் ஊழல் நடந்திருப்பதாக ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இந்த கடிதம் தமிழக அரசின் கவனத்துக்கு சென்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “மீண்டும் சகோதரர்களாக இணைந்துவிட்டோம்”.. இபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டாக பேட்டி!!