துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டமலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், 3 நாட்களுக்கு தமிழகத்தில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவம்பர் 27: தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், தமிழகத்தில் 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, 2 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திதய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பரபரப்பான இந்த சூழ்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்யார் புயல் வலுவிலந்து கரையை கடந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த புயல் உருவாக உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க: 29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு:
அந்தவகையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் முன்னெச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை மேலும் வலுப்பெறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த புயல் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. அதேபோல், வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கன முதல் அதிகனமழை எச்சரிக்கை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் மூன்று நாட்கள் கன முதல் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையே கனமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு செய்தார்.
இதையும் படிக்க : நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை: இடிந்து விழுந்த வீடுகள்.. வெள்ள அபாய எச்சரிக்கை!!
உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டமலாக வலுப்பெற்றுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேசமயம், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.