வலுவிழந்தது ‘தித்வா’ புயல்: சென்னை, திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?
தித்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னையை புயல் கடக்கும் வரையில், வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தித்வா புயல் வலுகுறைந்ததால், மழையின் அளவும் குறைந்துள்ளது.

கோப்புப்படம்
சென்னை, டிசம்பர் 1: வங்கக்கடலில் நிலவிய தித்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது இன்று காலை மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இலங்கையை ஒட்டிய பகுதிகளில் தித்வா புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் கடந்த மாதம் நவ.27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இலங்கையில் அதி கனமழையை கொடுத்தது. இதனால், அந்த நாடே வெள்ளத்தில் மூழ்கி காட்சியளித்தது. அதோடு, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, இலங்கையில் இருந்து தித்வா புயல் தமிழகம் நோக்கி பயணத்தை தொடங்கியது. இதையொட்டி, தமிழக கடலோரப் பகுதிகளான ராமேஸ்வரம், ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், காவிரி டெல்டா பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து.
இதையும் படிக்க : “இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயார்”.. முதல்வர் ஸ்டாலின் உறுதி !!
வலுகுறைந்த தித்வா புயல்:
தொடர்ந்து, சென்னை மற்றும் அதனையொட்டிய கடலோரப்பகுதிகளுக்கு வரும் எதிர்பார்த்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளால் தித்வா வலுவிழந்தது. எதிர்கொண்டது. வறண்ட காற்று ஊடுருவல் புயலின் மையப்பகுதியில் குறுக்கிட்டதால், ஈரப்பதத்துடன் கூடிய காற்று அங்கு இல்லாமல் போய்விட்டது. இதனால் மழைக்கான மேகக்குவியல்களை உருவாக்க முடியாமல் புயல் திணறியது. புயலின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும், அது மழையை கொடுக்கும் அளவுக்கு ஈரப்பதத்தை பெற முடியாத சூழலும் ஏற்பட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது:
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட தகவலின்படி, தித்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்துள்ளது. நேற்று அது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம்–புதுச்சேரி கடலோர பகுதியில், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 180 கி.மீ தொலைவில் இருந்தது. அந்த நேரத்தில் புயல் மற்றும் வடதமிழக கரைக்கு இடையேயான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ பதிவானது.
பின்னர், கரையை ஒட்டி வடக்குத் திசையில் நகர்ந்த தித்வா புயல், சென்னைக்கு 140 கி.மீ. தூரத்தை எட்டியபோது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுகுறைந்தது. அதன் போது, வடதமிழக கடற்கரைக்கு 80 கி.மீ. தொலைவில் இருந்தது. இன்று (டிசம்பர் 1) காலை மேலும் வலுவிழந்து, சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வட தமிழக கரையை ஒட்டி 20 கி.மீ. அருகில் நிலைத்திடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு:
இதன் காரணமாக இன்றும், நாளையும் (டிச.1 மற்றும் 2) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச.3 முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்க : கோவையில் 3 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை – என்ன நடந்தது?
65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று:
வட தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை:
தித்வா பயல் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.