Cuddalore: காதலனுடன் பிரச்னை.. வீடியோ கால் பேசும்போது பெண் தற்கொலை
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே 18 வயது மாணவி தர்ஷினி, காதலனுடன் வீடியோ காலில் பேசியபடி தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தகராறின் உச்சக்கட்டமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்ஷினி
கடலூர், செப்டம்பர் 22: கடலூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்துள்ள எருமனூர் என்ற கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகளான 18 வயதான தர்ஷினி விருதாச்சலத்தில் உள்ள அரசு கொளஞ்சியப்பர் கலை கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அவர் விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் விற்பனை கடையில் பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
காதலனுடன் ஏற்பட்ட தகராறு
இந்த நிலையில் மாணவி தர்ஷினி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தர்ஷினி செல்போன் கடைக்கு காலையிலேயே பணிக்கு வந்துள்ளார். தொடர்ந்து கிடைக்கும் இடைவேளை நேரத்தில் தனது காதலனுடன் செல்போன் மூலமாக வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மனமுடைந்த தர்ஷினி வீடியோ காலில் பேசிக்கொண்டே கடையின் பின்புறமாக சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு ஓய்வெடுக்கும் அறையில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை வீடியோ காலில் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் உடனடியாக இணைப்பைத் துண்டித்து விட்டு நேராக கடையில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
Also Read: காதல் தோல்வி.. 1,500 அடி பள்ளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
இதை கேட்டு பதறிப் போன ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்த போது தர்ஷினி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். செல்போன் கடையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது குறித்து விருதாச்சலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கடை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷினியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்ஷினியின் குடும்பத்தினரிடமும், அவர் காதலித்து வந்ததாக சொன்ன இளைஞரிடமும் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read: மதிக்காத மனைவி,மகன்.. பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!
பொதுமக்கள் வேண்டுகோள்
சமீப காலமாக இளம் வயதினர் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வை தேடாமல், தற்கொலை ஒன்றே தீர்வு என தீர்மானித்து விபரீத முடிவை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்து விடுகின்றனர். இது கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. அரசு மட்டுமின்றி பெற்றோரும், சுற்றியிருக்கும் சமூகமும் தற்கொலை எண்ணத்திலிருந்து அனைவரையும் மீட்டெடுக்க வேண்டும், அதுதொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)