தமிழகத்தில் பரவும் புதிய வைரஸ் பற்றி தெரியுமா? ஆபத்து இருக்கா? வெளியான தகவல்கள்!
Tamil Nadu Covid Cases : தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று ஓமிக்ரானின் திரிபுகள் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதனால், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, மே 28 : தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா (covid cases india) தொற்று ஓமிக்ரான் திரிபுகள் மற்றும் அதன் துணை வகைகளாகும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 69 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா தொற்று பரவியது. அதைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு, உலக நாடுகளில் பொருளாதாரம் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பல கட்ட சுகாதார நடவடிக்கைகளுக்கு பிறகு, கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
வேகமாக பரவும் கொரோனா
அதன்பிறகு, கொரோனா பாதிப்புகள் பெரிதாக ஏற்படவில்லை. இந்த நிலையில், ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. 2025 மே மாதத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.




இதுவரை 1009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் பரவும் கொரோனா தொற்று குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் பரவும் புதிய வைரஸ் பற்றி தெரியுமா?
இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது பரவி வருவது ஓமிக்ரான் திரிபுகள் மற்றும் அதனை துணை வகைகளாகும். இது JN.1.16.1, LF.7.9, மற்றும் LF.7.1.2 என கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் ஓமிக்ரானின் திரிபுகள் தான். தற்போது எந்த ஒரு புதிய கொரோனா வகை தொற்றுகளும் பரவவில்லை.
தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று லேசானது தான். மக்கள் பீதியடைய தேவையில்லை. இதை அறிவியல் ரீதியாக அணுக வேண்டிய அவசியம் உள்ளது. நாங்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்.
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருந்தால், குறிப்பாக பிற நோய்கள் உள்ளவர்கள், வயதானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நீங்கள் (மக்கள்) விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பீதியடைய வேண்டாம். கட்டுப்பாடுகள் எதுவும் தற்போது தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
1000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு
At 08:00 Hours, 26th May, the number of active COVID-19 cases in India stands at 1009: Ministry of Health and Family Welfare pic.twitter.com/ljFIsucOof
— ANI (@ANI) May 26, 2025
நாட்டில் அதிகபட்சமாக கேரளாவில் 430 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 209 பேரும், தமிழகத்தில் 69 பேரும், உத்தர பிரதேசத்தில் 15 பேரும், கர்நாடகாவில் 47 பேரும், குஜராத்தில் 83 பேரும், மேற்கு வங்கத்தில் 12 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா தொற்றால் மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே தெரிவித்து இருந்தது.