தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? தவெக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி
HC Questions Vijay : விஜய்யின் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பரப்புரையின் போது தொண்டர்களை தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா என விஜய்யிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சியில் தனது பரப்புரையைத் தொடங்கினார். இந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வருகிற செப்டம்பர் 20, 2025 அன்று தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக விஜய்யின் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் இழப்பீடு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொது சொத்துக்களுக்கு சேகம் ஏற்பட்டால் இழப்பீடு பெறும் வகையிலும், குறிப்பிட்ட தொகையை கட்சிகளிடம் டெபாசிட் செய்யும் வகையிலும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனுமதி கேட்கும்போதே இதுகுறித்து கட்சிகளுக்கு காவல்துறை அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.




பாரபட்சமின்றி அனுமதி
இந்த நிலையில் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், பிற கட்சிகளுக்கு இல்லா விதிகளை காவல்துறையினர் விதிக்கின்றனர் என்ற தவெகவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான விதிகளை வகுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தவெகவிற்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்
— TVK Party HQ (@TVKPartyHQ) September 17, 2025
தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா?
இது தொடர்பாக தனது தீர்ப்பில் பதிலளித்த நீதிபதிகள், தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நிற்கும் தொண்டர்களுக்கு அசம்பாவிதம் நேரிட்டால் யார் பொறுப்பேற்பது தொண்டர்களை கட்சித் தலைவர்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா எனவும் விஜய்யிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தவெக தலைவர் விஜய், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ள விஜய், அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக சென்னை பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், இந்த இரு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். பரப்புரை நடைபெறும் இடங்களில் தொண்டர்களை ஒழுங்காகக் கையாள்வது, பரப்புரை மேற்கொள்ளும் இடங்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வது, கூட்டத்தைச் சீராக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக நடைபெறும் விஜயின் பிரசாரத்துக்கு தொண்டர்களிடையை உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது . அந்த வகையில் நாகை, திருவாரூர் மாவட்ட பரப்புரை கூடுதல் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.