தேசிய தலைவராகும் வானதி ஸ்ரீனிவாசன்? பாஜக மேலிடம் எடுக்கும் முடிவு… விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
Vanathi Srinivasan MLA : அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணிகளில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது. தேசிய தலைவர் பதவிக்கு பெண்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இதில், எம்எல்ஏ வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமன் ஆகியோ பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.

சென்னை, ஜூலை 04 : பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக (BJP New President) தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக வானதி சீனிவாசன் உள்ளார். இவர் தமிழக பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவராக பார்க்கப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் பதவிக்கு இவரது பெயர் ரேஸில் இருப்பது ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதன் மூலம், தென் மாநிலத்தை பாஜக மேலிடம் குறிவைக்கப்படுவதாக தெரிகிறது. ஏற்கனவே, தென் தமிழகத்தை பிரநிதித்துவம் படுத்தும் வகையில், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தேசிய தலைவராக தென் மாநிலத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்படலாம் என பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.
தேசிய தலைவராகும் வானதி சீனிவாசன்?
தற்போது பாஜக தேசிய தலைவராக ஜெ.பி.நட்டா உள்ளார். இவரது பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் முடிவடைந்த நிலையில், மேலும், 2024 ஜூன் வரை இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த காலமும் முடிவடைந்துள்ளது. எனவே, தேசிய தலைவரை தேர்வும் செய்யும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆலோசனைகளையும் தீவிரமாக நடத்தி வருகிறது.
சமீபத்தில் தற்போதைய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோருடன் கட்சி தலைமையகத்தில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். இதனை அடுத்து, தலைவர் பதவி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.




அதன்படி, பாஜக தேசிய தலைவர் பதவிக்கு 5 ஆண்களும், 3 பெண்களின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. இந்த எட்டு பேரில் ஒருவரை பாஜக மேலிடம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான், அர்ஜுன் ராம் மேக்வால், பிரஹலாத் ஜேஷி, கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.
மேலும், பெண்களில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி ஆகியோர் ரேஸில் உள்ளனர். இதில், இரண்டு பேர் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது, நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
வானதி சீனிவாசன்
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக வானதி சீனிவாசன் உள்ளார். வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 1993ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். வானதி சீனிவாசன் பாஜகவின் மாநிலச் செயலாளர், பொதுச் செயலாளர் மற்றும் தமிழக துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில், கட்சி அவரை பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய தலைவராக நியமித்தது, 2022 ஆம் ஆண்டில் அவர் பாஜகவின் மத்திய தேர்தல் குழுவில் உறுப்பினரானார். இந்த நிலையில் தற்போது, இவர் தேசிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சராக உள்ளவர் நிர்மலா சீதாராமன். இவர் மதுரையைச் சேர்ந்தவர். தேசிய அளவிலும், தமிழக பாஜகவிலும் முக்கிய முகமாகவும் நிர்மலா சீதாராமன் செயல்பட்டு வருகிறார். நிர்மலா சீதாராமனுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கும் பட்சத்தில், தென்னிந்தியாவில் பாஜகவின் தடத்தை விரிவுபடுத்த உதவும் என சொல்லப்படுகிறது.
பாஜக மேலிடம் எடுக்கும் முடிவு
பெரும்பாலும் பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பெண்கள் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தேசிய தலைவர் பதவியை தேர்வு செய்யும் உரிமையை ஆர்எஸ்எஸ்க்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, தேசிய தலைவர் பதவிக்கு பெண்களை நியமிப்பதற்கு ஆர்எஸ்எஸ் ஒப்புதல் அளிக்கப்பட்டாக கூறப்படுகிறது. இதன் மூலம், தேசிய தலைவராக பெண் ஒருவர் முதல்முறையாக தேர்வு செய்யப்படுவார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகு என எதிர்பார்க்கப்படுகிறது.