“விஜய் மாமா”.. பதவியேற்ற மேடையிலேயே குழந்தைகளுக்கு நன்றி சொன்ன விஜய்!!
CM Vijay says thanks: தொடர்ந்து, விழா மேடைக்கு திரும்பிய முதல்வர் விஜய், மக்கள் முன்பே முக்கிய கோப்புகளில் தனது முதல் கையெழுத்திட்டார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரம் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்.

முதல்வர் ஜோசப் விஜய்
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற கண்கவர் விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்லேகர் தவெக தலைவர் விஜய்க்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். “தமிழகத்தின் முதலமைச்சராகிய சி.ஜோசப் விஜய் எனும் நான்…” என அவர் உறுதிமொழி ஏற்றபோது, அரங்கில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: CM Vijay Swearing-in Ceremony Live: முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.. அமைச்சர்கள் யார் யார்?
விஜய்யுடன் பதவியேற்ற அமைச்சர்கள்:
விஜய்யை தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, டி.கே.பிரபு உள்ளிட்ட 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நறைவுப்பெற்றதும் ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டார். அவரை முதல்வர் விஜய் மேடையில் இருந்து வெளியில் சென்று வழியனுப்பி வைத்தார்.
மக்கள் முன்பே முதல் கையெழுத்து:
தொடர்ந்து, விழா மேடைக்கு திரும்பிய முதல்வர் விஜய், மக்கள் முன்பே முக்கிய கோப்புகளில் தனது முதல் கையெழுத்திட்டார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரம் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய். பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார்.
குட்டி நண்பா, நண்பீஸுக்கு நன்றி:
தொடர்ந்து, மேடையில் பேசிய அவர், தனது வெற்றிக்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, இன்னொருத்தவங்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். அது, “இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா, நண்பீஸ் தான். அவர்களால் தான் இது நடந்துள்ளது. உங்களுக்கு எப்படி நன்றிக்கடன் செய்யனும், உங்களுக்காக உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து அனைத்து நல்லதையும் இந்த விஜய் மாமா செய்துகொடுப்பேன்” உறுதியாக இருங்கள் என்று அவர் கூறினார்.