ஓய்வூதியம் உயர்வு.. சுதந்திர தினத்தன்று 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
79th Independence Day : சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து பல்வேறு விருதுகளை வழங்கிய பிறகு, உரையாற்றினார். மேலும், 9 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அது என்னென்ன என்பதை பார்ப்போம்.

முதல்வர் ஸ்டாலின்
சென்னை, ஆகஸ்ட் 15 : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி (இன்று) 79வது சுதந்திர தினம் (Independence Day) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin Independence Day Speech) தேசியக் கொடியை ஏற்றினார். மேலும், காவல் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு விருதுகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவர் பேசுகையில், “நாம் இன்று விடுதலை காற்றை சுவாசிக்க காரணமாய் விளங்கும் தியாகிகளை போற்றி, அவர்களின் உன்னத நோக்கங்கள் நிறைவேற உறுதி எடுத்துக்கொள்வோம்.
இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் ஜனநாயக உரிமையை, 1947ஆம் ஆண்டே பெற்றுக் கொடுத்தவர் தலைவர் கலைஞர். தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த கலைஞர் வழியில் 5வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி. 14 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 11.1 சதவீதமாக அதிகரித்து மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது.
Also Read : திமுக அரசை கடுமையாக சாடிய ஆளுநர் ரவி.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு.. பரபரப்பு!
9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்
இந்தியாவிலேயே மிக விரைவாக வளர்ந்து வரும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இது மாபெரும் வளர்ச்சி. நாட்டின் வளர்ச்சி 6.7 சதவீதம் தான். ஆனால், தமிழ்நாடு 11.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி” எனக் கூறினார். தொடர்ந்து அவர் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மாநில அரசு விடுதலை போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி வழித்தோன்றல்களுக்கு, சிவகங்கை மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கு மாதந்தோறும் வழங்கும் ஓய்வூதியம் ரூ.11,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இரண்டாம் உலகப் போரில் பங்கற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் தங்கம் விடுதி ரூ.22 கோடியில் மதிப்பில் கட்டப்படும்.
Also Read : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
தமிழக மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயண திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையம், மாவட்ட அளவில் ஒரு ஓட்டுநர் பயற்சி பள்ளி தொடங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தின் பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற நவீன தொழில்நுட்பங்களில் 10,000 மாணவர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பில் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயற்சி வழங்கப்படும். இந்த 9 அறிவிப்புள் விரைவில் செயல்படுத்தப்படும்
யார் யாருக்கு விருதுகள்?
2025ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய 10 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, தகைசால் தமிழர் விருதினை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். டாக்டர் அப்துல் கலாம் விருது, இஸ்ரோ தலைவர் முனைவர் நாரயணனுக்கு வழங்கினார். மேலும், சாகசக் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமினா, காவல் உதவி கண்காணிப்பாளர் பிரசண்ண குமார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மருத்துவர் செல்வராஜ், ஆர்.மோகன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.