தமிழகத்தில் வேகமாக பரவும் சிக்குன்குனியா.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை.. மக்களே அலர்ட்!!
Chikungunya is increasing: நோய் பரவுவதைத் தடுக்க, மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் சிக்குன்குனியா பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியம். டெங்கு அல்லது சிக்குன்குனியா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் தனி வார்டுகளை அமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி, அவற்றை மறுஆய்வு செய்வது முக்கியம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சிக்குன்குனியாவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள்
சென்னை, ஜனவரி 22: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதாகப் பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சிக்குன்குனியா என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ஆகும். இந்தக் காய்ச்சலின் அறிகுறிகளாக மூட்டு வலி, கடுமையான தசை வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை காணப்படும். தமிழகத்தில் 2007ஆம் ஆண்டு சிக்குன்குனியா ஒரு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, சிக்குன்குனியா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், அவ்வப்போது சிக்குன்குனியா தொற்று பாதிப்புகள் மீண்டும் தோன்றி வருகின்றன. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க : கரூரில் சோக சம்பவம்…பைக் மீது மோதிய பேருந்து..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் சிக்குன்குனியாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது, சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. அதோடு, பாதிப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாக, மாவட்ட அளவில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்குப் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தாங்க முடியாத மூட்டு வலி:
தற்போதும் மக்களுக்கு கொசு கடித்தால் வரக்கூடியது டெங்கு என்ற எண்ணம் தான் பெரும்பாலும் உள்ளது. டெங்கு வேறு சிக்குன்குனியா வேறு. சிக்குன்குனியாவை கண்டறிய அதன் முக்கிய தனிப்பட்ட அறிகுறியான மூட்டுவலியை உள்ளடக்கியது. தாங்க முடியாத மூட்டு விறைப்பு உண்டு செய்யும் அளவுக்கு இந்த பாதிப்பு இருக்கும். சிக்குன்குனியா வந்தால் 7 முதல் 10 நாட்களில் சரியாகும் என்றாலும் இந்த மூட்டு வலி மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை கூட இருக்கும்.
சிக்குன்குனியா பாதிப்புகள் அதிகரிப்பு:
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் சிக்குன்குனியா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சுகாதார அதிகாரிகள் உரிய கண்காணிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை:
நோய் பரவுவதைத் தடுக்க, மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் சிக்குன்குனியா பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியம். டெங்கு அல்லது சிக்குன்குனியா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் தனி வார்டுகளை அமைக்க வேண்டும். நோய்த்தொற்றைக் கண்டறியத் தேவையான எலிசா (ELISA) பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நடமாடும் மருத்துவ விரைவு மீட்புக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி, அவற்றை மறுஆய்வு செய்வது முக்கியம்.
கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு:
ஒவ்வொரு வீட்டிலும் கொசு உற்பத்தியைக் கண்காணிக்கப் போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாவட்டப் பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் கொசுப் புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். காய்ச்சல் பாதிப்புகள் பதிவான பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தேங்கி நிற்கும் நீரைச் சேகரிக்கக்கூடிய அனைத்துப் பொருட்களும் அகற்றப்பட வேண்டும்.
மேலும் படிக்க: தவெக தேர்தல் அறிக்கை குழு லிஸ்டில் பெயர் மிஸ்ஸிங்.. விஜய் மீது செங்கோட்டையன் அப்செட்?.. வெளியான விளக்கம்!!
திடக்கழிவுகளை முறையாக அகற்றுவது கட்டாயமாகும். வாரத்திற்கு ஒரு முறை நீர்த்தேக்கத் தொட்டிகளைச் சுத்தம் செய்வதன் முக்கியத்துவம் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிக்குன்குனியா குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.