வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. தமிழகத்தில் மழை இருக்குமா?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதால், பிற மாவட்டங்களில் வெப்பநிலை சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் இயல்பான வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என விடுத்துள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், செப்டம்பர் 25, 2025: வங்கக் கடலில் தொடர்ந்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. அதாவது, 23 செப்டம்பர் 2025 அன்று மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், மத்திய மியான்மார் கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடக்கு மற்றும் அதனை ஒட்டி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் செப்டம்பர் 25, 2025 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக மழைக்கு வாய்ப்பா?
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை, அதாவது 26 செப்டம்பர் 2025 அன்று தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோர பகுதிகளுக்கு அருகில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அது தொடர்ந்து 27 செப்டம்பர் 2025 அன்று தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 8875 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு – எப்படி விண்ணப்பிப்பது?
வங்கக் கடலில் தொடர்ந்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருந்தாலும், தமிழகத்தில் மழை பெய்யாது. ஏனெனில், அவை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா இடையே உருவாகுவதால் தமிழகத்துக்கு நேரடி தாக்கம் இருக்காது. தமிழகத்தில் மழை, தென்மேற்கு பருவமழையின் காரணமாக மட்டுமே இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோவை நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை:
இதன் அடிப்படையில், செப்டம்பர் 25, 2025 அன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 26, 2025 அன்று கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், செப்டம்பர் 27, 2025 அன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். செப்டம்பர் 30, 2025 வரை சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. ஒரு மணி நேரம் ஆலோசனை.. அதிமுகவில் பரபரப்பு!
அதிகரிக்கும் வெப்பநிலை:
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதால், பிற மாவட்டங்களில் வெப்பநிலை சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் இயல்பான வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை:
- மதுரை: 37° செல்சியஸ்
- தொண்டி: 36.6° செல்சியஸ்
- தூத்துக்குடி: 36.4° செல்சியஸ்
- திருச்சி: 35° செல்சியஸ்
- தஞ்சாவூர்: 35° செல்சியஸ்
- கரூர்: 35° செல்சியஸ்
சென்னை:
- நுங்கம்பாக்கம்: 34.6° செல்சியஸ்
- மீனம்பாக்கம்: 34° செல்சியஸ்