அதிகாலையில் ஏன் இந்த பனிமூட்டம்? இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? வானிலை ரிப்போர்ட்
Tamil Nadu Weather Update: அதிகபட்ச வெப்பநிலைப் பொறுத்தவரையில், ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட குறைவாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், பிப்ரவரி 9,2026: வானிலை முறை பகுப்பாய்வின் அடிப்படையில், இன்று காலை 08:30 மணி வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் உருவாகும் அதிக வாய்ப்பு உள்ளது. நிலவும் தெளிந்த வானநிலை (clear sky) காரணமாக, இரவு நேர கதிர்வீச்சு குளிர்ச்சியானது (radiational cooling) அதிகரித்து, பூமியின் மேற்பரப்பிலிருந்து வெப்ப இழப்பு அதிகமாகும். இதன் விளைவாக, மேற்பரப்பு வெப்பநிலை குறைந்து, வளிமண்டலத்தின் கீழ்மட்டங்களில் வெப்பநிலை புரட்டல் (temperature inversion) உருவாகும். தற்போது நிலவும் கிழக்குத் திசை காற்று, வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை நிலப்பகுதிகளுக்குள் கொண்டு வந்து, கீழ்மட்டங்களில் ஈரப்பத அளவை அதிகரிக்கிறது.
எதனால் இந்த பனிமூட்டம் உருவாகும்?
அதிக ஈரப்பதம், குறைந்த மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வெப்பநிலை புரட்டல் (temperature inversion) ஆகியவை இணைந்து, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனிமூட்டம் உருவாவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும். மேலும், லேசான மற்றும் அமைதியான காற்று நிலை எதிர்பார்க்கப்படுவதால், கிடைமட்ட காற்று பரவல் குறைந்து, பனிமூட்டம் உருவாவதற்கு மேலும் ஆதரவாக இருக்கும். இதன் விளைவாக, அதிகாலை நேரங்களில், பனிமூட்டம் காரணமாக காட்சித்திறன் (visibility) கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: நாதக-தவெகவினர் கடும் மோதல்…3 பேர் கைது…இருவருக்கு வலை வீச்சு!
திருத்தணியில் பதிவான 16 டிகிரி செல்சியஸ்:
பகல் நேர வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து காணப்படும் சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் குறைந்தபட்சமாக 16.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், கொடைக்கானலில் 7.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்பட்டது.
அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்:
வரக்கூடிய நாட்களில், அதாவது பிப்ரவரி 12, 2026 ஆம் தேதி வரை, தமிழகத்தில் வறண்ட பாணியிலேயே நிலவக்கூடும் என்றும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களின் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது..ஜாக்டோ ஜியோ விழாவில் முதல்வர் பேச்சு!
அதிகபட்ச வெப்பநிலைப் பொறுத்தவரையில், ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட குறைவாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் காணப்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.