குறையும் மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை சொல்வது என்ன?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் நல்ல மழை இருந்து வரும் நிலையில், தற்போது மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 10, 2025: தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 10 2025 மற்றும் ஆகஸ்ட் 11 20025 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 12 2025 முதல் ஆகஸ்ட் 15 2025 வரை தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதலே கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வந்தது.
தென்மேற்கு பருவ மழை:
தென்மேற்கு பருவமழை என்பது பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் 2025 ஆண்டு பொருத்தவரையில் தென்மேற்கு பருவ மழை என்பது முன்கூட்டியே மே மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து மே மாதத்தில் நல்ல மழை பதிவு இருந்து வந்தது. ஜூன் மாத தொடக்கத்தில் முதல் இரண்டு வாரங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கமும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் படிக்க: சென்னை மக்களே அலர்ட்… முக்கிய ரூட்டில் மின்சார ரயில்கள் ரத்து.. எங்கு?
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. 20 சதவீதம் தள்ளுபடி.. எப்போது? யார் யாருக்கு?
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 36.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 34 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 35 டிகிரி செல்சியஸ், மதுரையில் 34.2 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 356 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 34.0 டிகிரி செல்சியசும், மீனம்பாக்கத்தில் 33.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.