உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5000 அபராதம்.. 15 குழுக்களை அமைத்த சென்னை மாநகராட்சி..
Pet License: உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களை கண்டறிந்து தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்காக, 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு குழு என 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 57,062 நாய்களுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, டிசம்பர் 15, 2025: உரிமம் இல்லாமல் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு இன்று முதல், அதாவது டிசம்பர் 15, 2025 தேதி ஆன இன்று முதல், ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட மாநிலம் முழுவதும் தெரு நாய் கடி மற்றும் வளர்ப்பு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் நாய் கடி சம்பவங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மட்டுமல்லாமல், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் அவ்வப்போது மனிதர்கள்மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக சிறு குழந்தைகள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
2025-ல் 5.25 லட்சம் பேர் பாதிப்பு:
2021 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.19 லட்சமாக இருந்தது. அது 2022 ஆம் ஆண்டு 3.64 லட்சமாகவும், 2023 ஆம் ஆண்டில் 4.41 லட்சமாகவும், 2024 ஆம் ஆண்டில் 4.8 லட்சமாகவும் உயர்ந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டு தற்போது வரை 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க: கடலூரில் நடக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ..
இந்த சம்பவங்களைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்கள் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5000 அபராதம்:
இந்த உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் 4 முறை நீட்டிக்கப்பட்டது. அதாவது, முதலில் நவம்பர் மாதம் வரை இருந்த அவகாசம், அதன் பின்னர் டிசம்பர் மாதமாக மாற்றப்பட்டது. மேலும், இதற்காக மூன்று நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. அதன் பின்னர், இந்த கால அவகாசம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, டிசம்பர் 15, 2025 தேதி ஆன இன்றிலிருந்து செல்லப் பிராணிகளுக்கு உரிமம் இல்லை என்றால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்? அதன் நிலைப்பாடு என்ன!
உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களை கண்டறிந்து தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்காக, 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு குழு என 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெறுவதற்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டும், இதுவரை 57,062 நாய்களுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, உரிமம் பெறாத நாய் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.