பிராட்வே இனி இல்ல.. ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம்.. எப்போது திறப்பு?
Chennai Broadway Bus Stand : சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திற்கு பதில், தற்காலிகமாக ராயபுரத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் 2025 ஜூன் 2வது வாரத்தில் திறக்கப்படும் என கூறப்படுகிறது. பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 27 : சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திற்கு (Broadway bus stand) பதிலாக, ராயபுரத்தில் தற்காலிகமாக (Royapuram bus stand) பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் 2025 ஜூன் இரண்டாவது வாரத்தில் திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்தது பிரட்வே. சென்னை கடற்கரை, உயர் நீதிமன்றம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்டவை அருகில் இருப்பதால் மக்கள் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து சென்று வருகின்றனர். இதனால், அனைத்து நாட்களிலும் பிராட்வே பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும். முன்னதாக, பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்பட்து. அதன்பிறகு மக்கள் தொகை அதிகமானதால், 2003ஆம் ஆண்டு கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது.
இடம் மாறுகிறது பிராட்வே பேருந்து நிலையம்
அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகமாக இருப்பதாலும், நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், தற்போது கிளாம்பாக்கத்தில் அதிநவீன வசதியுடன் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போது பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 4.42 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிராட்வே பேருந்து நிலையத்தில் 80 பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ளன. தற்போது, மாநகர போக்குவரத்து கழகம் இங்கிருந்து 850 பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், இந்த பேருந்து மாற்றப்பட்டு, ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் விரைவில் இடிக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் 9 மாடிக் கொண்ட பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதோடு, குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு, 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.
ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம்
இதன் காரணமாக, பிராட்வே பேருந்து நிலையம் மாற்றப்பட்டு, ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ராயபுரத்தில் 3.45 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 70 பேருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும்.
இதில் பல்வேறு பேருந்து தளங்கள், தங்குமிடங்கள், ஓய்வு அறை, கண்காணிப்பு அறை, தாய்மார்களுக்கு அறை, 5 கழிவறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு தனி கழிவறை, மாற்றத்திறனாளிகள் அமரும் வகையில் பேருந்து நிலையத்தில் காத்திருப்பு இருக்கை, குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையம் ரூ.7.5 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு, பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்படுகிறது. அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது” என்று கூறினார்.