Schools Reopen: ஜூன் 2ல் பள்ளி திறப்பு உறுதி.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் 2025, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் கோடை காலத்தில் அதிக வெயில் வாட்டி வதைத்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இம்முறை வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால் பள்ளி வழக்கம்போல திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 26: தமிழகத்தில் 2025, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகுப்பறைகளும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆய்வகத்தில் காலாவதியான பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொடர்பான கட்டமைப்பு சீர் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வளாகம் உபகரணங்கள் நீர் தேக்க தொட்டிகள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
கடைவீதியில் அலைமோதும் கூட்டம்
2 மாத இடைவெளிக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ, மாணவியர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தங்கள் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இதேபோல் புத்தகப்பையும் விதவிதமான வண்ணங்களில் இந்தாண்டு விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகள் கோடை காலத்தில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது. இதனால் பள்ளிகள் திறப்பு ஜூன் முதல் மற்றும் இரண்டாம் வாரம் வரை தள்ளிப்போனது. இந்தாண்டும் அப்படியான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளி திறப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு
இப்படியான நிலையில்தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் இரண்டாம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்படி, மாணவர்கள் மதிய இடைவேளை முடிந்ததும் சிறார் பருவ இதழை படிக்க வைக்க வேண்டும். காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு தரமாகவும் தாமதம் இன்றியும் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
செவ்வாய்க்கிழமைதோறும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க உதவுவதுடன் வாரம் ஒரு முறை மாணவர்களுக்கு நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இருக்கும் மேற்கூரைகளில் குப்பைகள் இல்லாததை உறுதி செய்திருக்க வேண்டும். பள்ளி திறந்த அன்று மாணவர் சேர்க்கையை கொண்டாட்டமாக நடத்த வேண்டும்.
அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வகுப்பறை தொடங்கி ஆசிரியர்கள் ஓய்வு அறை, தலைமை ஆசிரியராக என அனைத்தும் சுத்தம் செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது