பெரம்பலூரில் ரெளடி மீது என்கவுண்டர் ஏன்? மத்திய மண்டல ஐ.ஜி. பரபரப்பு விளக்கம்!
Perambalur Rowdy Encounter: பெரம்பலூர் மாவட்டத்தில் ரெளடி என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மண்டல ஐ. ஜி. பால கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதில், அவர் அளித்த விளக்கம் சினிமா பாணியில் நடைபெற்றது போல என்கவுண்டர் நடைபெற்று உள்ளது .

பெரம்பலூரில் ரெளடி என்கவுண்டர் குறித்து ஐஜி விளக்கம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றவாளியை போலீசார் வாகனத்தில் அழைத்து சென்ற போது, அந்த நபரை கொலை செய்வதற்காக ரவுடி கொட்டு ராஜா என்பவர் காவல் துறை வாகனத்தின் மீது நாட்டு வெடி குண்டை வீசி இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ரவுடி கொட்டு ராஜாவை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், அவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய மண்டல ஐ ஜி பால கிருஷ்ணன் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஜனவரி 24- ஆம் தேதி போலீசார் வெள்ளை காளி என்பவரை திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு உணவகத்தில் போலீசார் உணவருந்தி கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. இதில், ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.
5 சிறப்பு குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டை
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அதன்படி, ஊட்டியில் பதுங்கி இருந்த சிலரை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்தனர். இதில், ரவுடி கொட்டு ராஜா அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி உள்ளிட்ட 5 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரிடம், போலீசார் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு.. ரவுடி அழகுராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காலையிலேயே பரபரப்பு..
நாட்டு வெடி குண்டுகள்- ஆயுதங்கள் பதுக்கி வைப்பு
அப்போது, ஒரு இடத்தில் நாட்டு வெடி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் கொட்டு ராஜா தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் கொட்டு ராஜாவை அழைத்துக் கொண்டு மங்களமேடு சுங்கச்சாவடி அருகே உள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு, போலீசார் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடி குண்டுகளை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரவுடி கொட்டு ராஜா ஒரு நாட்டு வெடி குண்டை போலீசார் மீது திடீரென வீசினார்.
காவல் துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு-போலீசாருக்கு வெட்டு
இதில், அந்த நாட்டு வெடிகுண்டு காவல்துறை வாகனத்தின் மீது பட்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து, ரவுடி கொட்டு ராஜா சப் இன்ஸ்பெக்டர் சங்கரை ஆயுதத்தால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது, சுதாரித்துக் கொண்ட மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் கொட்டு ராஜாவை நோக்கிய துப்பாக்கியால் சுட்டார். இதில் ரவுடி கொட்டு ராஜா உயிரிழந்தார் என்று தெரிவித்தார். முன்னதாக, ரெளடி கொட்டு ராஜா வெட்டியதில் கையில் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் சங்கரை ஐஜி. பால கிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் படிக்க: நாமக்கல்லில் கொடூர விபத்து..மினி லாரி மீது கனரக லாரி மோதல்..இடிபாடுகளில் சிக்கி மூவர் பலி!