விக்கிரவாண்டியில் சோகமாக மாறிய சுற்றுலா.. கார் தீப்பிடித்து 3 பேர் பலி

Villupuram Car Accident: விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே நடந்த கோர கார் விபத்தில் 3 சென்னை இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மூணாறுக்குச் சுற்றுலா சென்றபோது அதிவேகமாக வந்த கார் சாலைத் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் அப்துல் அஜீஷ், தீபக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டியில் சோகமாக மாறிய சுற்றுலா.. கார் தீப்பிடித்து 3 பேர் பலி

தீப்பிடித்த கார்

Updated On: 

02 Oct 2025 14:09 PM

 IST

விழுப்புரம், அக்டோபர் 2: விழுப்புரம் மாவட்டம் அருகே நடந்த கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயங்களுடன் 2 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நாகம்மை காட்டன் மில் பகுதியில் இந்த விபத்தானத்து நடைபெற்றுள்ளது. சென்னையைச் சேர்ந்த அப்துல் அஜீஷ், தீபக், சம்சுதீன், ரிஷி, மோகன் ஆகிய 5 பேரும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று அதிகாலை இவர்கள் காரில் கிளம்பிய நிலையில் விடுமுறை நாள் என்பதால் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டுள்ளது.

இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது. சரியாக நாகம்மை காட்டன் மில் அருகே வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நேராக அங்கிருந்த சாலை தடுப்பில் அதிவேகமாக மோதிய வேகத்தில் தீப்பிடித்தது. இதில் காரில் இருந்தவர்கள் தீயில் சிக்கி வலியால் அலறினர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Also Read: Dausa Road Accident: ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி காரில் எரிந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து உள்ளே சிக்கியவர்களை மீட்ட நிலையில், அதில் சம்சுதீன், ரிஷி, மோகன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் இருந்தனர். படுகாயங்களுடன் போராடிய அப்துல் அஜீஷ், தீபக் ஆகியோர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் விபத்துக்கு காரணம் அதிவேகமாக வந்ததா? அல்லது கார் பிரேக் பழுதானதால் இப்படி நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது.

Also Read:  பெங்களூருவில் அதிர்ச்சி! ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..! என்ன நடந்தது?

எனினும் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது.  உயிரிழந்தவர்கள் சென்னை திருவல்லிக்கேணி, ஆவடி, கொளத்தூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.