வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்..
Virus Fever In Tamil Nadu: தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 2, 2025: தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பதிவாகி வருகிறது. சென்னையில் வெப்பநிலையின் தாக்கமும் பகல் நேரங்களில் அதிகமாகவே உள்ளது.
பருவநிலை மாற்றம்:
2025 அக்டோபர் மாதக் கடைசி வாரம் வரை, சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேக வெடிப்பின் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதனைத் தொடர்ந்து, வெப்பச் சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பதிவாகி வருகிறது. எனினும், காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது; குறிப்பாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.
வைரஸ் காய்ச்சல் பரவல் – முக கவசம் அணிய அறிவுறுத்தல்:
இந்தப் பருவநிலை மாற்றங்களின் காரணமாக பலருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்படுகின்றன. இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் என்பதால், விரைவில் பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஒவ்வொருவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கற்க வயதில்லை.. 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்.. தாத்தா என அன்பாக அழைக்கும் மாணவர்கள்..
குறிப்பாக முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும், தற்போது பரவி வரும் காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் என்பதால், ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுயமருந்து எடுத்துக் கொள்ளாமல், அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று, மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா?
முக்கியமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.