விவசாய நிலத்தில் கிடைத்த பழங்கால நாணயங்கள் – விவசாயிடம் போலீசார் விசாரணை
Gold Coin : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலையத்தில் மண்ணை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு மண் பானை முழுவதும் தங்க காசுகள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் விவசாயி ஒரு வாரம் தாமதமாக தகவல் தெரிவித்ததால் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்கள்
திருப்பத்தூர், டிசம்பர் 28: திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மண் சமப்படுத்தும் பணியின் போது, பழங்காலத்தைச் சேர்ந்த தங்க நாணயங்கள் (Gold Coins) கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுந்தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதாகும் ஆதவன் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் அதிக அளவில் பெரிய கற்கள் இருந்ததால், அவற்றை நீக்க முடிவெடுத்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 22, 2025 அன்று ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
விவசாய நிலத்தில் கிடைத்த பழங்கால தங்க நாணயங்கள்
அப்போது நிலத்தில் பள்ளம் தோண்டியபோது, மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான பழைய மண் குடம் ஒன்று திடீரென வெளிப்பட்டுள்ளது. அதனை திறந்து பார்த்த நில உரிமையாளர் ஆதவன், அதற்குள் சிறிய அளவிலான பழங்கால தங்க நாணயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தத் தகவலை அவர் டிசம்பர் 27, 2025 அன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காந்திலி காவல்துறையினர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதையும் படிக்க : இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
பின்னர், நில உரிமையாளர் ஆதவன், அந்த மண் குடத்தில் இருந்த தங்க நாணயங்களை தாசில்தார் நவநீதனிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, வருவாய் துறை அதிகாரிகள் நாணயங்களை எண்ணிப் பார்த்ததில், மொத்தம் 86 சிறிய தங்க நாணயங்கள் இருந்தது உறுதியாகியது.
தாமதமாக தகவல் தெரிவித்ததால் விவசாயி மீது ஏற்பட்ட சந்தேகம்
இந்நிலையில், மண் குடத்தின் மூடி உடைந்த நிலையில் இருந்ததும், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஆதவன் தகவல் அளிக்க ஒரு வாரம் தாமதமானதும் அதிகாரிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நிலத்தின் உரிமையாளர் ஆதவன் மீது கிராம நிர்வாக அலுவலர் முருகன் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : தொடர் விடுமுறை-பண்டிகைகள்…சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!
இதற்கிடையில், கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவை, எந்த அரசரின் ஆட்சிக் கால நாணயங்கள் என்பதைக் கண்டறிய தொல்லியல் ஆய்வாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். விவசாய நிலத்தில் வழக்கமான மண் சமப்படுத்தும் பணியின் போது, பண்டைய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இந்த சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.