Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TVK Conference: தவெக மாநாடு.. களைகட்டிய மதுரை.. குவியும் தொண்டர்கள்!

Tamilaga Vettri Kazhagam Madurai Conference: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மாநாட்டில் விஜய்யின் உரையை கேட்க தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

TVK Conference: தவெக மாநாடு.. களைகட்டிய மதுரை.. குவியும் தொண்டர்கள்!
விஜய்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 21 Aug 2025 06:41 AM

மதுரை, ஆகஸ்ட் 21: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்து வருவதால் அம்மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். திமுகவை அரசியல் ரீதியாகவும், பாஜகவை கொள்கை ரீதியாகவும் எதிரியாக அறிவித்து தனது அரசியல் பாதையில் செயல்பட்டு வருகிறது.

தவெக மாநாடு

இப்படியான நிலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் பாரபத்தி என்னும் இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் சாலை மார்க்கமாக நேற்று மதுரை வந்தடைந்தார். மாநாடு நடைபெறும் இடத்தில் அனைத்து பணிகளையும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆய்வு செய்தார். 100% பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

Also Read: TVK Party: தவெக மாநாடு.. களமாட காத்திருக்கும் விஜய்.. இதுதான் ஹைலைட்!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 2024 அக்டோபரில் விழுப்புரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் நடைபெற்ற தவறுகள் இந்த மாநாட்டில் இடம் பெறக் கூடாது என்பதில் கட்சியினர் கவனமுடன் செயல்பட்டு வருகின்றனர். சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை லட்சம் பேர் அமர்வதற்கான இருக்கைகள், ஒவ்வொருவருக்கும் அரை லிட்டர் தண்ணீர், தின்பண்டங்கள் அடங்கிய தொகுப்பு, தொண்டர்கள் அமைந்திருக்கும் இடத்திலேயே குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை, மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் வரும் வாகனங்களை பார்க்கிங் செய்ய இரண்டு பெரிய இடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன

வழிநெடுக உணவு வழங்கவும் திட்டம்

மேலும் ட்ரோன்கள் மூலம் மருந்து பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் திடலில் 40 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கான இருபுறமும் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் தமிழக கட்சி கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு வழிநெடுக உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாநாடு நடைபெறும் திடலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பாதுகாப்பில் கவனம்

மேலும் இந்த மாநாட்டில் பெண்களுக்கு என தனியாக இரண்டு பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களை வழிநடத்தும் வகையில் 50 பெண் பவுன்சர்கள் உள்ளிட்ட 550 பவுன்சர்கள் பணியாற்ற உள்ளனர். மேலும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் சார்பில் 2000 நபர்களும், காவல்துறை சார்பில் 3000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாநாடு நடைபெறும் இடத்தை மதுரை பகுதியில் உள்ள மக்கள் ஏதோ திருவிழா கூட்டம் போல் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

Also Read: TVK Conference: மதுரை தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்!

விஜய் பேசப்போவது என்ன?

இப்படியான நிலையில் இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக நேற்று மாநாட்டின் முகப்பு பக்கத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் வைக்கும் போது பெல்ட் அறுந்ததால் கொடி கம்பம் சேதம் அடைந்தது.  இதனை சரி செய்யும் பணி ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் மேடைக்கு அருகிலேயே சிறியதாக ஒரு கொடி கம்பம் அமைத்து அதில் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் விஜய்யின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு அவரது 2026 சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு அச்சாரமிடும் வகையில் அமையும் என்பது தொண்டர்களின் கணிப்பாக உள்ளது.