செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷா உடனான சந்திப்பில் என்ன நடந்தது?
Edappadi Palaniswami Meet With Amit Shah: செப்டம்பர் 16, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். கட்சி விவகாரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது

கோப்பு புகைப்படம்
டெல்லி, செப்டம்பர் 16, 2025: அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சசிகலா “அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; அப்போதுதான் 2026 தேர்தலில் அதிமுக வலுவாக வெற்றி பெறும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வமும் இந்த கருத்தை ஆமோதித்தார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதிமுக உட்கட்சி விவகாரம்:
இது போன்ற சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; அதற்காக எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்காக பத்து நாள் கெடுவும் வலியுறுத்தியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு மறுப்பு தெரிவித்து, அடுத்த நாளே அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
மேலும் படிக்க: களத்தில் இறங்கும் நயினார் நாகேந்திரன்.. அக். முதல் வாரத்தில் தொடங்கும் சுற்றுப்பயணம்..
செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை:
அந்த கூட்டத்தில் எஸ். பி. வேலுமணி, ஜே.டி. பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி விவகாரத்தை பொது வெளியில் கூறியதற்காக செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் பேரில், அவர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டதோடு கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து செங்கோட்டையன், “இது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றே” எனக் குறிப்பிட்டார். பின்னர், 2025 செப்டம்பர் 8 அன்று அவர் ஹரித்வார் கோவிலுக்கு செல்வதாக அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு பதிலாக அவர் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து அவர் பேசியதாகவும், “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தியதாகவும் கூறினார்.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை
செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி:
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, செப்டம்பர் 16, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். இதற்கு முன்னதாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கட்சி விவகாரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து பேசிய சில நாட்களுக்குள், எடப்பாடி பழனிசாமியும் அமைச்சரை சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது.