Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெடிக்கும் உட்கட்சி விவகாரம்.. நவ. 5 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

Admk District Secretaries Meeting: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நவம்பர் 5 ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி விவகாரம் - குறித்து கேட்டறியப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

வெடிக்கும் உட்கட்சி விவகாரம்.. நவ. 5 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Nov 2025 06:15 AM IST

சென்னை, நவம்பர் 1, 2025: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் மோசமடைந்துள்ள நிலையில் வரவிருக்கும் நவம்பர் 5, 2025 அன்று மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனை போட்டி நிலவுகிறது — அதாவது, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு அணிகள் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவைப் பொருத்தவரையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தாண்டி மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே சமயத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

மேலும் படிக்க: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 4,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்:

இந்த சூழலில், அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மட்டுமல்லாமல் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என பத்து நாள் அவகாசம் வழங்கியிருந்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கினார்.

அதனைத் தொடர்ந்து மௌனம் காத்திருந்த செங்கோட்டையன், தேவர் ஜெயந்தி அன்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உடன் ஒரே காரில் பயணம் மேற்கொண்டது பெரும் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க உத்தரவிட்டார்.

நவம்பர் 5 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:


அதிமுகவில் உட்கட்சி விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நவம்பர் 5 ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நவம்பர் 5, 2025 காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – மீண்டும் புயல் உருவாகுமா?

உட்கட்சி விவகாரம் – தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை:

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி விவகாரம் — குறிப்பாக செங்கோட்டையன் நீக்கப்பட்டது தொடர்பாக — பலருக்கும் மனக்கசப்பு இருப்பதால், அது குறித்து கேட்டறியப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள், பூத் கமிட்டிகள் அமைப்பது, எந்தெந்த தொகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.