சென்னை, ஏப்ரல் 30, 2026: உழைப்பாளர்களின் தினமான மே தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கே அல்லாமல் அதன் அரசியல், சமூக பரிமாணங்களுக்கும் அடிப்படை காரணியாக இருக்கும் உந்துசக்தியாகும். உலகினை உழைப்பால் செலுத்தி, தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மே தின வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்:
தொழிலாளர்களுக்காக மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, சென்னை மே தினப் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளை கழக ஆட்சி தோறும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்வும் செய்து வந்துள்ளனர்.
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவை சந்திக்கவில்லை என்றால், நானும் கம்யூனிஸ்டாகி இருப்பேன் என்று கூறிய கலைஞர் தலைமையில், தொழிலாளர் நலத்திற்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த வழியில், திராவிட மாடல் ஆட்சியிலும் பல தொழிலாளர் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: “வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனம் தேவை!”.. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!!
அமைப்புசாரா தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம் உருவாக்கப்பட்டு, மின்சார ஸ்கூட்டர் மானியம் போன்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
‘உலக தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்; நீங்கள் இழப்பதற்கு சங்கிலிகளைத் தவிர எதுவுமில்லை’ என அழைத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு சொல்லாலும் செயலாலும் உழைப்பாளர்களை போற்றும் இந்த மே தினத்தில், உழைக்கும் தோழர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மே தின வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி:
அதேபோல், எடப்பாடி கே. பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகிற்கு எடுத்துக்கூறும் மே தின திருநாளில் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம், தங்களின் உரிமைகளுக்காக பல நூற்றாண்டுகளாக போராடி, அடிமைத்தனத்தை உடைத்தெழுந்த நாள் மே தினம் ஆகும்.
மேலும் படிக்க: சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
‘தன் கரத்தை நம்பி உயர்ந்து நிற்பவன் தொழிலாளி’ என்று எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார். ஜெயலலிதா அவர்களின் வழியில், எனது தலைமையிலான ஆட்சியிலும் தொழிலாளர்களுக்காக பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
உழைப்பே நம்மை உயர்த்தும். உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வு மனநிறைவை அளிக்கும். நம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.