திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
‘தோல்வி நிச்சயம்’ என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. அதனால், திமுக வெற்றி பெறும் என்ற பொய்யான படிமத்தை உருவாக்கி, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்யவும், கலவரம் ஏற்படுத்தவும் முயற்சிகள் இருக்கலாம். எனவே, 04.05.2026 அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது நம் கழகத் தொண்டர்கள், பூத் ஏஜெண்ட்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கோப்பு புகைப்படம்,
ஏப்ரல் 30, 2026: இந்தியாவில் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த கருத்துக்கணிப்புகளில் திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. சில நிறுவனங்கள் மட்டுமே அதிமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தன. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கருத்துக்கணிப்புகள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருத்துக்கணிப்பு – எடப்பாடி பழனிசாமி கருத்து:
அதில், “தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் பொய் தகவல்களைப் பரப்பி, தமிழக மக்களையும் நம் கழகத் தொண்டர்களையும் திசைதிருப்பும் வேலை திமுகவினர் திட்டமிட்டு செய்து வருகின்றனர். எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த ‘பொன்மனச் செம்மல்’ எம்.ஜி. ராமச்சந்திரன், கழகத்தை இரும்புக் கோட்டையாக மாற்றிய இதய தெய்வம் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் ஆசி நமக்கு உள்ளது.
கருத்துக்கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு இல்லை:
எனவே, நமக்கு எதிரான கருத்துக்கணிப்புகளை கண்டு யாரும் தளர வேண்டாம். கருத்துக்கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு இல்லை. 2006–2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சில கருத்துக்கணிப்புகள் திமுக ஆட்சி தொடரும் என கூறின. ஆனால், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ‘218 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம்’ என்று உறுதியாக தெரிவித்தார். அதன்படி, அதிமுக கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் திமுக 23 இடங்கள் மட்டுமே பெற்றது.
மேலும் படிக்க: வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
2016ஆம் ஆண்டிலும் இதேபோன்று கருத்துக்கணிப்புகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டு, அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதுவே வரலாறு.
ஒவ்வொரு தேர்தலிலும் கருத்துக்கணிப்புகளை முறியடித்து வெற்றி பெறுவது நம் கழகத்தின் தனித்துவம். இந்த தேர்தலிலும் அதே வெற்றி தொடரும். அதிமுக 210 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
திமுக ஆட்சி அமையாது:
‘தோல்வி நிச்சயம்’ என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. அதனால், திமுக வெற்றி பெறும் என்ற பொய்யான படிமத்தை உருவாக்கி, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்யவும், கலவரம் ஏற்படுத்தவும் முயற்சிகள் இருக்கலாம்.
எனவே, 04.05.2026 அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது நம் கழகத் தொண்டர்கள், பூத் ஏஜெண்ட்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் மக்கள் விரோதமான, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி அமையாது. மக்களின் நலனுக்காக உழைக்கும் அதிமுக ஆட்சி நிச்சயம் அமையும். நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!!” என தெரிவித்துள்ளார்.