வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
Tamil Nadu Weather Alert: வங்கக்கடலில் வரும் ஆகஸ்ட் 18, 2025 அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 16, 2025) கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 16, 2025: வருகின்ற 2025 ஆகஸ்ட் 18ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 16,, 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், தேனியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஆகஸ்ட் 15 2025 தேதியான நேற்று நல்ல மழைப்பதிவு இருந்தது அந்த வகையில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 16, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 15, சின்கோனா (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 12, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: வதந்திகளை நம்ப வேண்டாம்.. திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் – ராமதாஸ் அறிவிப்பு!
அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மழை:
அதை போல் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 17 2025 தேதியான நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 18 2025 முதல் ஆகஸ்ட் 22 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமெரிக்கா வரி.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்!
சென்னையில் குறையும் வெப்பநிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை ஆங்காங்கே பதிவாகி வரும் நிலையில் வெப்பநிலை என்பது கணிசமாக குறைந்துள்ளது. எனவே அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.