வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளின் காரணமாக, செப்டம்பர் 22, 2025 இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், செப்டம்பர் 22, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. அதேபோல், மத்திய ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளது. இதைத் தவிர, செப்டம்பர் 22, 2025 இன்று காலை வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில், வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வரவிருக்கும் செப்டம்பர் 25, 2025 அன்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, செப்டம்பர் 26, 2025 அன்று தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, செப்டம்பர் 27, 2025 அன்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இனி ஒரே டிக்கெட் மூலம் பஸ், மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம்.. அறிமுகமாகும் சென்னை ஒன் செயலி..
11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளின் காரணமாக, செப்டம்பர் 22, 2025 இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 25, 2025 வரை தமிழகத்தில் மிதமான மழை பதிவாகக்கூடும் எனவும், மேலும் செப்டம்பர் 26 மற்றும் செப்டம்பர் 27, 2025 ஆகிய இரண்டு நாட்களில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: விஜய் சுற்றுப்பயணத்தில் மீண்டும் மாற்றம்.. செப். 27 எந்த மாவட்டத்திற்கு விசிட்?
அதிகரிக்கும் வெப்பநிலை:
மழை ஒரு பக்கம் இருந்தாலும், வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.