விஜய் சுற்றுப்பயணத்தில் மீண்டும் மாற்றம்.. செப். 27 எந்த மாவட்டத்திற்கு விசிட்?
TVK Vijay Campaign: த.வெ.க தலைவர் விஜய், வரவிருக்கும் செப்டம்பர் 27, 2025 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கு பதிலாக கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 22, 2025: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்தில் மீண்டும் ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஆளும் திமுக அரசு தரப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள் ஆய்வு மேற்கொண்டு, மக்களை சந்தித்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, உரையாற்றியும் சாலை வலம் மேற்கொண்டும் வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டம் தோறும், தொகுதி வாரியாக மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார்.
நெருங்கும் தேர்தல் – தலைவர்கள் சுற்றுப்பயணம்:
இதற்கிடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா “உள்ளம் தேடி, இல்லம் நாடி” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 2025 அக்டோபர் முதல் வாரம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இனி ஒரே டிக்கெட் மூலம் பஸ், மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம்.. அறிமுகமாகும் சென்னை ஒன் செயலி..
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 13, 2025 அன்று அவர் தனது சுற்றுப்பயணத்தை திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தொடங்கினார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரையாற்றினார்.
விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்:
இந்த சூழலில், வரவிருக்கும் செப்டம்பர் 27, 2025 அன்று வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அதனை மாற்றி, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான அனுமதி மனுவும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: விஜயை பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறாது, அவர் நல்ல பாதையில் செல்ல வேண்டும் – கமல்ஹாசன்..
ஆனால், இந்த சுற்றுப்பயணத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரவிருக்கும் செப்டம்பர் 27, 2025 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கு பதிலாக கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 11 மணிக்கு நாமக்கல்லிலும், பிற்பகல் 3 மணிக்கு கரூரிலும் பிரச்சாரம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு காவல்துறையினர் இன்னும் சில நாட்களில் பதில் அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.