சென்னையில் பயங்கரம்.. நடுரோட்டில் திமுக பிரமுகர் கொலை
Chennai Crime News: சென்னை அடையாறில் திமுக பிரமுகரும் வழக்கறிஞருமான குணசேகரன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார். ஆறு பேர் கொண்ட கும்பல் இக்கொலையைச் செய்தது. கடந்த ஆண்டு வழக்கறிஞர் கௌதம் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இச்சம்பவம் நடந்ததா என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

குணசேகரன்
சென்னை, அக்டோபர் 14: சென்னையில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் அவ்வை நகரை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம் என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். திருவான்மியூர் திருவள்ளுவர் சாலையில் ஆறு பேர் கொண்ட கும்பலால் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தில் கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் அதிபருமான குணசேகரன், கமலேஷ், நித்தியானந்த், சதீஷ் ராஜ், பார்த்திபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த வழக்கறிஞரான குணசேகரன் நேற்று (அக்டோபர் 13) மாலை அடையாறு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பாபி திடீரென மடக்கியுள்ளது. தன் மீது தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என அறிந்து சுதாரித்த குணசேகரன் அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக அடையார் பிரதான சாலையில் ஓடி உள்ளார்.
இதையும் படிங்க: தந்தை செய்த கொடூரம்.. 3 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை.. தஞ்சையில் பயங்கரம்!
ஆனால் அந்த கும்பல் குணசேகரனை விடாமல் துரத்தி சென்று அரிவாளால் கொடூரமாக வெட்டிச் சாய்த்தது. இதில் முகம் சிதைந்த நிலையில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவருடன் பைக்கில் சென்ற கொட்டிவாக்கம் குணம் அங்கிருந்து தப்பியோடியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக அடையாறு காவல் துறை நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த குணசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்ற வழக்கறிஞர் கௌதம் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கத்தில் நடைபெற்றதா என்ற கோணத்தில் அடையாறு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2024ல் ஏற்பட்ட தகராறு.. இளைஞர் கொலை.. பழிவாங்கிய நண்பர்!
மேலும் உயிரிழந்த குணசேகரன் கொட்டிவாக்கம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் மற்றும் அடிதடி சம்பவங்களில் அடிக்கடி ஈடுபடுவார் என்றும், அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் காவல்துறையினரின் விசாரணைகள் தெரிய வந்தது.
இதனிடையே சம்பவம் நடைபெற்ற அடையாறு மெயின் ரோட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றன. இதன் மூலம் கொலை செய்த நபர்கள் யார் என்பதை கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.