Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இதயம் வரை சென்று குத்திய ஊசி.. நாகையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Nagapattinam News: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கீழே விழுந்ததில் தரையில் கிடந்த ஊசி அவரது மார்பில் குத்தி இதயம் வரை சென்று தாக்கியது. வலி உணராததால் சிகிச்சை எடுக்காமல் இருந்த அவர், இரண்டு நாட்களுக்குப் பின் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயம் வரை சென்று குத்திய ஊசி.. நாகையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பெண்ணில் நெஞ்சில் குத்திய ஊசி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 27 Aug 2025 06:45 AM

நாகப்பட்டினம், ஆகஸ்ட் 27: இளம்பெண் ஒருவருக்கு ஊசி ஒன்று இதயம் வரை சென்று குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் குத்தியது கூட தெரியாமல் இருந்தது இன்னும் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2025, ஆகஸ்ட் 18 ஆம் தேதி, தன் வீட்டில் பரணில் இருக்க பொருட்களை எடுக்க முயன்றார். அப்போது, கால் இடறி எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே தரையில் விழுந்துள்ளார். அப்போது தரையில் கிடந்த ஊசி ஒன்று அவரது நெஞ்சில் ஆழமாக குத்தி புகுந்துள்ளது. ஆனால் வலி, இரத்தம் என எதுவும் இல்லாமல் இருந்துள்ளதால் அப்பெண் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவ சிகிச்சை எடுக்காமல் இருந்து விட்டார்.

இதற்கிடையில் 2 நாட்கள் கழித்து ஆகஸ்ட் 21 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு இலேசான மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர் உடனடியாக அப்பெண்ணை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அப்பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்ததில் நெஞ்சில் குத்திய ஊசி இதயம் வரை பாய்ந்தது தெரிய வந்தது.

Also Read: இளைஞருடன் வாழ கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி.. 53 வயது நபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!

இதற்கிடையில் மருத்துவர்கள் அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி விரைவாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு அப்பெண்ணுக்கு
இதய அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஊசி குத்தியதும், இதயத்தைச் சுற்றி நீர் நிறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதன் பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் உடலில் இருந்து ஊசியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அதன்படி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவக்குழுவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிக்கும்போது கீழே விழும்போது அப்பெண்ணுக்கு உடலில் அடிபட்டுள்ளது. இதனால் சில இடங்களில் வலி ஏற்பட்ட நிலையில் ஊசி குத்திய வலியை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவரின் நெஞ்சில் குத்தியது தைக்கும் ஊசி என்பது தெரிய வந்தது.

Also Read: விழுப்புரம்: வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை… அரசு மருத்துவமனையில் அலட்சியம்

அது சுமார் 5 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாகும். சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் அப்பெண் தற்போது மிகவும் நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் அப்பெண் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.