AIADMK: 2026 சட்டசபை தேர்தல்.. வலுவாக அமையும் அதிமுக கூட்டணி.. ஒன்று சேரும் கட்சிகள்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூடுபிடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியில் 2026-ல் அரசு அமைந்தால் ஊழல் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை (Amit Shah) சந்தித்தது மிகப்பெரிய பேசு பொருளாக மாறிவிட்டது. அந்த சந்திப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் அமித்ஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance) அரசு அமைந்த பிறகு மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என தமிழில் பதிவிட்டிருந்தார். ஆனால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மக்கள் பிரச்சினைகளை பற்றி அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்தார். கூட்டணி உறுதியாகி விட்டதா என கேள்வி எழுப்பியதற்கு அதெல்லாம் தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என மழுப்பலாக பதில் தெரிவித்து இருந்தார்.
இப்படியான நிலையில் அதிமுக 206 சட்டமன்ற தேர்தலை பாஜகவுடன் இணைந்து தான் எதிர்கொள்ளும் என்பது பலரின் கணிப்பாக மாறி உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மற்றும் 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் அதிமுக மற்றும் பாஜகவினரின் நடவடிக்கைகளை கவனித்தால் கூட்டணி வைக்கும் சூழலுக்கு சென்றிருப்பதை அறியலாம்.
மாறும் கூட்டணி கணக்குகள்
ஏற்கனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலை திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு முனை போட்டிகளுடன் தமிழ்நாடு எதிர்கொண்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய மும்முனை போட்டியானது ஏற்பட்டிருந்தது. தொகுதி பங்கீடு, அதிமுக தலைவர்கள் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட பல விஷயங்கள் அந்த கூட்டணி முறிய காரணமாக அமைந்தது.
ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் மிக பெரிய கட்சியான அதிமுகவுடன் தேமுதிக தவிர்த்து எந்த பெரிய கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை. மாறாக பாஜக கூட்டணியில் அமுமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் களமிறங்கின.
மீண்டும் வரலாறு திரும்புமா?
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுகவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றன. தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படும் நிலையில் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. இதனிடையே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மிக கடுமையான போட்டி நிலவும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
காரணம் திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதான கட்சிகளுக்கு இடையே நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் போட்டியிடுவதால் இழுபறி நீடிக்கலாம் என கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் கூட்டணி மன்றம் நிகழலாம் எனவும் சொல்லப்படுகிறது. நடிகர் விஜய்க்கு தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் அவர் ஜெயிக்காவிட்டாலும் வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளது. இந்த கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக மிகப்பெரிய பலத்துடன் களமிறங்க வேண்டும். அதன்படி அதிமுகவில் தற்போது தேமுதிக மட்டுமே பெரிய கட்சியாக உள்ளது. இவர்களுடன் பாஜக,பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்தால் நிச்சியம் பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும்.
ஒன்று படுமா அதிமுக?
இதற்கிடையில் அதிமுகவில் பிரிந்து கிடக்கும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மீண்டும் சேர்க்க தயாராக இல்லை. பலரும் ஒருங்கிணைந்த அதிமுக மட்டுமே திமுகவை வீழ்த்துவதற்கான அஸ்திவாரம் என கூறும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு மறுப்பு கூறி பிடிவாதமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் எப்படியும் தேர்தலுக்குள் அதிமுக இணைந்து விடும் என நம்பிக்கையுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பு காத்திருக்கிறது. கூட்டணி பலமாக அமைந்தால் மட்டுமே தேர்தல் களம் கடுமையாக இருக்கும். இல்லாவிட்டால் ஒன் சைடு கேமை போல தேர்தல் திருவிழா சுவாரசியம் இல்லாமல் போய்விடும். உண்மையில் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி எப்படி அமையப் போகிறது யாரெல்லாம் உள்ளே வெளியே ஆட்டத்தில் இருக்கிறார்கள் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்