Annamalai: அண்ணாமலைக்கு கடைசி வாய்ப்பு.. 2026 தேர்தலில் பாஜகவுக்கு செக்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்புகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என்ன மாதிரியான வியூகம் வகுக்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்று பட்டால் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற கேள்வி தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Tamil Nadu Assembly Elections 2026) நடைபெற இன்னும் சரியாக ஓர் ஆண்டு மட்டுமே உள்ளது. இப்படியான நிலையில் அரசியல் சூழல் (TN Politics) என்பது ஒவ்வொரு நாளும் மாற்றம் கண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகம், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் நாம் தமிழர் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழகத்திற்கு (Tamilnadu) மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகும்.
ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் 1967ஆம் ஆண்டு தொடங்கி 2021 சட்டமன்றத் தேர்தல் வரை மாறி மாறி ஆட்சி அமைத்துள்ளது. இந்த இரு கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகள் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் என தொடர்ச்சியாக திட்டங்களை தீட்டி வருகிறது. குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் பாரதிய ஜனதா கட்சி கடந்த 2021 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் பாஜக மலராது என தெரிவித்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த முடிவு அமைந்தது. திருநெல்வேலி, நாகர்கோவில், மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய நான்கு தொகுதிகளிலும் பாஜக வென்றது. அப்போது தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்தார். அதற்கு முன் தமிழக பாஜக தலைவராக பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருந்தாலும் எல் முருகன் கையாண்ட விதம் என்பது வேறு விதமாக இருந்தது.
யார் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைக்கிறாரோ அந்த தொகுதி மாவட்ட செயலாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என தடாலடியாக அறிவித்தார். எல் முருகன் தமிழ்நாட்டிற்கு நான்கு எம்எல்ஏக்களை பெற்றுக் கொடுத்தது மத்தியில் பாஜக தலைமையை மகிழ்ச்சியில் ஆற்றியது. அதன் விளைவாக எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தது.
அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இப்படியான நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை 2022 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரின் செயல்பாடுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிரடியாக இருந்தாலும் அவை பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக 2024 மக்களவை தேர்தல் நேரத்தில் அண்ணாமலையின் செயல்பாடுகள் மக்களை மட்டுமல்லாது கூட்டணி கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தும் வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாஜக மத்தியில் பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அந்த கட்சிக்கு வாக்களிக்க மக்கள் மனதளவில் இன்னும் தயாராக சில காலம் இருக்கும். இது எந்த கட்சிக்கும் பொருந்தும். இப்போது இருக்கும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள் என்றால் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்தான் மறைந்தாலும் இன்றளவும் காரணமாக இருக்கிறார்கள்.
ஆனால் அண்ணாமலை கட்சியை எப்படி மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பது, எப்படி வாக்குகளை பெறுவது என்ற பாணியில் செல்லாமல், தேர்தலுக்கு முன்பிருக்கும் ஆட்சி காலத்தில் ஆடும் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். எல்.முருகன் போன்று தேர்தல் நேரத்தில் சரியான களப்பணி ஆற்றினால் கண்டிப்பாக வரும் தேர்தலில் பாஜக தரப்பில் எம்எல்ஏக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை தழுவினால் நிச்சயம் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து உள்ளது. இதற்கு முன்னால் தலைவர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட்டார்களா என்றால் இல்லை. ஆனால் இவர் மீது ஒருவித எதிர்பார்ப்பு உள்ளது.
ஒன்று பட்டால் வெற்றி நிச்சயம்
ஏற்கனவே 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை தான் தலைவராக இருப்பேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அண்ணாமலை செயல்பாடு புயல் வேகத்தில் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு செயலிலும் விளைவுகள் என்பது மிக முக்கியமானது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பிரிந்து பாஜக தன்னுடைய தலைமையில் ஒரு கூட்டணி அமைத்தது. அதன் விளைவு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இணைந்து செயல்பட்டிருந்தால் நிச்சயம் 40க்கு 40 தொகுதிகளிலும் சரியான போட்டி இருந்திருக்கும்.
வாக்குகள் பிரிந்தது திமுகவின் வெற்றிக்கு காரணங்களில் ஒன்றாக அமைந்தது. ஆக இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் அண்ணாமலை ஏதாவது சொல்லி அதற்கு பங்கம் வந்து விடுமோ என தொண்டர்கள் அச்சப்படுகின்றனர். திமுகவை ஆட்சியில் இருந்த அகற்ற இணைந்து செயல்படுவதே வழி என்ற நிலையில் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தொண்டர்கள் பலரும் இப்போதே தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.