தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை – பரபரப்பான திருப்பரங்குன்றம் – 144 தடை உத்தரவு அமல்
திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுபடி தீபத் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறி இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலைில் ஏராளமானோர் திரண்டு போராடியதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை விதித்து மதுரை காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை, டிசம்பர் 3 : திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுபடி தீபத் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறி இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலைில் ஏராளமானோர் திரண்டு போராடியதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை விதித்து மதுரை காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி, பாஜக மற்றும் இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவிட்டுள்ளார்.
மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு மேல் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றத்தால் முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தீபத்தூணிலேயே கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டது. டிசம்பர் 1, 2025 அன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கார்த்திகை தீபமன்று திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணிலும் ஏற்றலாம் என்று அனுமதி வழங்கினார்.
தீபத்தூண், முஸ்லிம்கள் வழிபடும் சிக்கந்தர் தர்காவிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் மட்டுமே உள்ளது. இதனால் தர்கா அருகே தீபம் ஏற்றினால் சமூக ஒற்றுமை பாதிக்கப்படலாம் பழைய மரபு பின்பற்றப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது.




‘மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்’
இந்த நிலையில் இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்திருந்தார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் மகாதீபம் ஏற்றாமல், உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
இது நீதிமன்ற உத்தரவிற்கு முரணானது என்பதால் சில இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து சில இந்து அமைப்புகள் மலையின் உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் காவல்துறையினரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி மதுரை மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.