திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு!
Thiruparankundram Kumbabishekam: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 2025 ஜூலை 14 அன்று நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் பைபாஸ் சாலைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, ஜூலை 13: முருகப்பெருமானின் (Lord Murugan) அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் (Thiruparankundram Murugan Temple) 2025, ஜூலை 14 ஆம் தேதி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோயில் நிர்வாகம் தரப்பில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிவிப்புகளை நாம் காணலாம்.
கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை
அதன்படி கப்பலூரில் இருந்து திருநகர் வழியாக செல்லக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் கூத்தியார்குண்டு மேம்பாலம் வழியாக பைபாஸ் சாலையை பிடித்து செல்ல வேண்டும். அதேபோல் காளவாசல் பைபாஸ் ரோடு வழியாக திருப்பரங்குன்றம் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேனி ரோடு சென்று நாகமலை – புதுக்கோட்டை பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம். அவனியாபுரம் இருந்து வரும் வாகனங்கள் முத்துப்பட்டி – திருப்பரங்குன்றம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி அழகப்பன் நகர் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.
பொதுபோக்குவரத்துக்கான வழி
திருநகரில் இருந்து மதுரை நகருக்குள் திருப்பரங்குன்றம் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கிரிவலப் பாதை திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக செல்லாமல் பைபாஸ் ரோடு வழியாக மூட்டா தோட்டம் சென்று அங்கிருந்து இலக்கை அடையலாம். அதேபோல் மதுரை நகரில் இருந்து திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியே திருநகருக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்தி பயணிக்கலாம். அவனியாபுரம் ரோட்டில் இருந்து திருப்பரங்குன்றத்தின் வழியாக திருநகருக்கு செல்லும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பில் வலது புறமாக திரும்பி அழகப்பன் நகர் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதியை போல.. இனி தமிழக கோயில்களில் பிரேக் தரிசனம்!
கும்பாபிஷேகம் பார்க்க வரும் பக்தர்கள் கவனத்திற்கு
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்கள் ஆர்ச்சிலிருந்து திருப்பரங்குன்றம் சன்னதி வரை மற்றும் துணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து லாலா கடை வரை, நான்கு ரத வீதிகள் என எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது.
மதுரை நகரில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்களை மூட்ட காலனி சந்திப்பு மற்றும் திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை வழியாக செங்குன்றம் சாலை சென்று அங்கிருக்கும் கே.வி.பள்ளி சந்திப்பில் வலது புறம் திரும்பி கிரிவலம் பாதையில் உள்ள அறநிலையத்துறை வாகன நிறுத்தம், செவ்வந்திபுரம் கண்மாய், காசி விசுவநாதர் கோயில் உள்ள வாகன நிறுத்தம் ஆகியவற்றில் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கியது யாகசாலை பூஜைகள்
வேன், பஸ்கள் போன்ற வாகனங்களை மூட்டா தோட்டம் அருகில் இருக்கும் மன்னர் கல்லூரி பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக பார்க்கிங் இடத்தில் நிறுத்த வேண்டும். அதேபோல் அரசுத்துறை வாகனங்கள் அனைத்தும் அருணகிரி திருமண மண்டபத்திலும், இருசக்கர வாகனத்தை திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகில் இருக்கும் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியிலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சந்திப்பிற்கு எதிரேயிருக்கும் காலி இடத்திலும் நிறுத்த வேண்டும்.
மேலும் மாணிக்கம் ராமசாமி கல்லூரி மைதானம், மாருதி கார் ஷோரூம் அருகில் உள்ள காலி மைதானம், கருவாட்டுபாறை ரயில்வே கேட் அருகில் இருக்கும் பார்க்கிங் ஆகியவற்றில் தங்களது வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.