T20 World Cup 2026: எதிரணிக்கு பயம்! டி20 உலகக் கோப்பையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கப்போகும் 5 வீரர்கள்!
T20 World Cup 2026 Top 5 Key Players: இந்தியாவில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவில் டிராவிஸ் ஹெட் என பல வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இருக்கின்றனர். இருப்பினும், 2026 டி20 உலகக் கோப்பையில் பார்வையாளர்களை கவரக்கூடிய வகையில் செயல்பட இருக்கும் 5 முக்கியமான இளம் வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளில் பல அனுபவ வீரர்கள் இருந்தாலும், இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவில் டிராவிஸ் ஹெட், பாகிஸ்தானில் ஃபர்ஹான் என பல வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இருக்கின்றனர். இருப்பினும், 2026 டி20 உலகக் கோப்பையில் பார்வையாளர்களை கவரக்கூடிய வகையில் செயல்பட இருக்கும் 5 முக்கியமான இளம் வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
அபிஷேக் சர்மா (இந்தியா)
இந்திய டி20 அணிக்காக கடந்த சில மாதங்களாக அபிஷேக் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்திய நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து, இந்திய அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், ஐசிசி டி20 தரவரிசை பேட்ஸ்மேன் பட்டியலில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, அபிஷேக் சர்மா ஜிம்பாப்வேக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து மிரட்டினார். எனவே, உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை நிச்சயம் அபிஷேக் சர்மா மீது இருக்கும்.
ALSO READ: விரைவில் டி20 உலகக் கோப்பை.. பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு போகும் 5 முக்கிய போட்டிகள்!




டெவால்ட் பிரெவிஸ் (தென்னாப்பிரிக்கா)
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 22 வயதான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டெவால்ட் பிரெவிஸ், தனது டி20 திறமைக்காக ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸுடன் ஒப்பிடப்படுகிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பிரேவிஸின் ஸ்ட்ரைக் ரேட் 173.70 ஆக உள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெறும் 56 பந்துகளில் 125 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். மேலும், நடந்து வரும் SA20 2025-26 லீக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
ஆக்ரோஷமான சிக்ஸர் அடிப்பதில் பெயர் கொண்ட பிரேவிஸ், 2026 டி20 உலகக் கோப்பையில் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.
பிரையன் பென்னட் (ஜிம்பாப்வே)
ஜிம்பாப்வேயின் 22 வயது நட்சத்திரமான பிரையன் பென்னட், சமீபத்திய டி20 கிரிக்கெட்டில் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார். கடந்த 2025ம் ஆண்டில் ஒரு சதம் மற்றும் பல அரைசதங்களுடன் 936 ரன்கள் குவித்து பென்னட் அசத்தினார். இதன்மூலம், பென்னட்டின் ஆக்ரோஷமான தொடக்க பாணி 2026 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் என நம்பப்படுகிறது.
2026 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக, குரூப் B-யில் பென்னட்டின் அதிரடியான ஆட்டம் மிக முக்கியமானதாக இருக்கும்.
ஜேக்கப் டஃபி (நியூசிலாந்து)
நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி, 2025 ஆம் ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 17 சராசரியுடன் 81 விக்கெட்டுகளை வீழ்த்தி தன் திறமையை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக 2025ம் ஆண்டில் டஃபி, டி20 வடிவத்தில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதன்படி, இந்தியா மற்றும் இலங்கை போன்ற மண்ணில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக பந்துவீசி உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் 5 நாட்கள்.. பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய அணி!
ஜான் ஃப்ரைலிங்க் (நமீபியா)
நமீபியாவின் ஆல்-ரவுண்டர் ஜான் ஃப்ரைலிங்க் சமீபத்திய போட்டிகளில் ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதில், 2025 இல் ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றில் நைஜீரியாவுக்கு எதிராக ஒரு சதம் அடித்தது அடங்கும். 130+ ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சிக்கமாக ரன் கொடுத்து பந்துவீசுவதால் இவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற ஃப்ரைலிங்க், விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள குரூப் ஏ-வில், ஃப்ரைலிங்கின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பங்களிப்பு நமீபியா அணிக்கு பலமாக அமையும். இவரது சிறப்பான ஆட்டம் நமீபியாவின் மிகவும் ஆபத்தான வீரர்களில் ஒருவராக ஆக்குகிறது.